வெள்ளி, 5 மே, 2017

சூ மந்திரக்காளி

சூ மந்திரக்காளி !
==================================ருத்ரா

சூ மந்திரக்காளி!
இந்திய தேசப்படத்தில்
தமிழ் நாட்டைக்காணோம்.
உழவர்கள்
மண்ணுக்குள் புதைந்து போயினர்.
உழவு எனும்
மனிதனின் உந்து சக்தி
சின்னாபின்னமாகிப்போனது.
ஆட்சி எந்திரம் எனும்
பணம் பிழியும் ஆலைச்சக்கையில்
நம் அகநானூம் புறநானூறும்
வெறும் குப்பையானது.
தமிழ் எனும் மொழிக்குள்
ஊறும்
வீரம் மாண்பு விழுமம் எல்லாம்
டெண்டருக்குள்
குவாரி மணற் காடுகளுக்குள்
மர்மக்கதை நாற்றங்களுக்குள்
புதைந்தே போயின.
மத்தியில் கூட்டாட்சி
மாநிலத்தில் சுயாட்சி
என்ற சொல்லின் தோரணங்களில் எல்லாம்
மத்தியில் குவிந்த
வெறி பிடித்த... ஏதோ ஒன்றின்
ரத்தம் சொட்டிக்கொண்டே இருக்கிறது.
ஒரு விசாரணை போதும்.
கல்லெறிய.
பதவியும் ஊழலும் மலிந்த‌
காக்கைக்கூட்டங்கள் சிதற.
இவர்கள்
நெஞ்சை நிமிர்த்தி வலம் வந்தபோதும்
முதுகு சுரண்டும்
அந்த சவுக்கு நுனிகளில்
பாரதி தாசனின் அந்த‌
"சங்கே முழங்கு" கூட
மழுங்கிப்போய் ஒலிக்கிறது.
தமிழின் தொல்காப்பியப்பூங்கா
ஏதோ ஒரு சுடுகாட்டுப்புகைமூட்டத்தில்
மறைந்து போகும்
ஊமைவலிகள் ஊளையிடும்
தேசமா இந்த தமிழின் தேசம்?
கனக விசயர்களுக்காக‌
"மண்வெட்டி கூலி தின்னலாச்சே! நம்
வாள்வலியும் தோள்வலியும் போச்சே!"
ஓட்டளித்து பெருமை காக்கும்
நம் வலிமை எல்லாம் "நோட்டுக்கு"
ஓட்டழிக்கும் சிறுமையாகிப் போச்சே!
திராவிடம் என்றதோர் சிங்க சீற்றம்
கூவத்தில் மூழ்கவோ கூச்சல் இட்டார்.
குழுக்கள் ஆனதால்
புழுக்கள் ஆனார்.
புகைப்படங்கள் புழுதி பறக்க
கார்ப்பரேட் விளம்பர ஊடகங்கள்
சல்லடை போட
தமிழன்
தன்னையே உடைத்துக்கொண்டான்
சுக்கு நூறாய்.
இந்திக்காரன் போடும்
அம்புப்படுக்கையில் போய்விழ
போட்டிகள் போடுகின்றான்.
அந்த அடிமைப் பதவிகளின்
அடியில் போய் விழுகின்றான்.
கீழடியில் தமிழ்ச்சூரியன்
உதிக்காமல் உறைந்து போகும்
சூழ்ச்சிகள் புரிகின்றார்கள்!
இன்னும்
கீழே கிடக்கின்றான் ..தமிழன்
கீழே கிடக்கின்றான்.
ஜிகினாத்தலைவர்கள் இங்கே
சினிமாக்கள் காட்டுகின்றார்.
உறக்கம் கலையாத தமிழா நீ
உறக்கம் கலைவதெப்போ?
குடி முழுகி போவதும் தெரியாமலேயே
குடமுழக்கு மந்திரங்களில் நீ
கும்மாளம்போட லாமோ?
மழித்தலும் நீட்டலும் வேண்டாம்
என்றானே!..
இந்த  தாடி சாமியார்களா உனக்கு
செங்கோல்  ஏந்துவது?
தமிழ் வரலாற்றை நீ தொலைக்கலாகுமா?
சந்திக்க வேண்டிய திருப்பு முனை
உனக்கு இது !
சிந்திக்க வேண்டிய நெருப்பு முனையும்
உனக்கு இதுவே தான்!
தமிழனாக இரு!
தமிழனாக எழு !
தமிழே உன் ஒளி!
தமிழனே விழி !

=============================================================







3 கருத்துகள்:

grdg சொன்னது…

பர்வீன் சுல்தானா அவர்களின் பேச்சில் இதைக் கேட்டேன், ஒருமாத காலம் googleல் தேடி இன்று கண்டுபிடித்து விட்டேன், Google ல் தேட வழிவகை செய்யுங்கள்,
இப்படிக்கு ,கவியுகன் நண்பன் அசோக்

grdg சொன்னது…

பர்வீன் சுல்தானா அவர்களின் பேச்சில் இதைக் கேட்டேன், ஒருமாத காலம் googleல் தேடி இன்று கண்டுபிடித்து விட்டேன், Google ல் தேட வழிவகை செய்யுங்கள்,
இப்படிக்கு ,கவியுகன் நண்பன் அசோக்

ruthraavinkavithaikal.blogspot.com சொன்னது…

Thank you very much

கருத்துரையிடுக