சனி, 13 மே, 2017

சூபர்ஸ்டாரும் அடையாள அட்டையும்

சூபர்ஸ்டாரும் அடையாள அட்டையும்
====================================================ருத்ரா

சூபர்ஸ்டார் அவர்களே!
ஸ்டைல் நடிப்பின்
பெருங்கடல் நீங்கள்.
தேசங்கள் கடந்த
தேசம் உங்களுடையது.
ஜாக்கிச்சான் போன்றவர்கள் கூட‌
உங்கள் விசிறியாமே.
சாதி மத இன மொழி
எல்லைகளை எல்லாம் உடைத்துக்கொண்டு
உங்கள் சிகரெட் புகைவளையங்கள்
ஒலிம்பிக் வளையங்களாகியுள்ளன.
சாதிக்கப்பிறந்த
ஒரு சிலருள்ளும்
ஒரு சிலரில்
நீங்கள் ஒரு கோஹினூர் வைரம்.
ஆதார் அட்டை என்னும்
கொச்சைத்தனமான அடையாளமும்
அப்புறம்
மெடலிக் டிடெக்டர் கொண்டு
தடவப்படக்கூடாத இடங்களையெல்லாம்
தடவச்செய்யும்
ஒரு இறுக்கமான வளையங்களுக்குள்
சிறைப்படுவதும்
உலக மாமனிதன் எனும்
உயர்ந்த வானம் ஆகிப்போன‌
உங்களுக்கு
கொஞ்சம் கூட  பொருந்தவில்லையே.
ஆனாலும் உங்கள் பாதுகாப்பு
எங்களுக்கு உயிர் போன்றது தான்.
நெருக்கமாக உங்கள் ரசிகனுடைய‌
இதயத்துடிப்பும்
உங்கள் இதயத்துடிப்போடு
ஒன்றி கேட்க வேண்டும் என்ற‌
உங்கள் ஆசையின் மதிப்பு
கோடி கோடி கோடி ரூபாய்களால்
ஆனது என்பதை
யாரும் மறுப்பதற்கு இல்லை.
வியர்க்க விறு விறுத்து
நீங்கள் "மன்னன்"படத்தில்
அடித்து பிடித்து டிக்கட் வாங்கியதைப்போல‌
டிக்கட் வாங்கிய அன்பு உள்ளங்கள்
ஒவ்வொன்றும் ஓவ்வொரு பொற்காசு
என்று வைர(முத்து)வரிகள்
துல்லியமாகத்தான் உள்ளன.
அடையாள அட்டை என்று இருப்பது தான்
கொஞ்சம் இடிக்கிறது.
இதற்கு பேசாமல் எங்கள் முதலமைச்சராய்
வந்து விடுங்களேன்.
எத்தனை நாளைக்குத்தான்
உங்கள் "வள்ளி" பட வசனத்தை
நாங்கள் கிள்ளி கிள்ளி கேட்டுக்கொண்டிருப்பது?
நாங்கள் தமிழர்கள்.
எங்கள் தமிழுக்குள் தான்
எல்லா உலக மொழிகளும் ஒலிக்கும்
பொதுமை இதயம் உண்டு.
யாதும் ஊரே !
யாவரும் "நன்றாய் கேளீர்"
யாவரும் நம் கேளிர்!
அந்தக்கலிஃபோர்னியக்கவர்னர் வந்து
எங்கள் தமிழ்த்திரையில்
தோன்றினாலும் போதும்
எங்கள் தமிழ் அமெரிக்க இங்கிலீஷ்
அற்புதமாய் பேசும்.
அப்புறம் அவர் தான்
எங்கள் தமிழ் நாட்டுக்கவர்னர்.
எங்கள் மாமன்னர் ரஜனி அவர்களே
உங்கள் செங்கோல்
எங்கள் இதயத்தில்!
இதை அடையாள அட்டைகளால்
அழுக்காக்கி விடாதீர்கள்.

===========================================================கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக