ஞாயிறு, 21 மே, 2017

" ரன் அமக் "


" ரன் அமக் "
==========================================ருத்ரா

என்ன இது?
எப்படி இப்படி?
ஆங்கிலத்தில் " ரன் அமக் " என்பார்கள்.
எதற்கு ஓடுகிறோம் என்று தெரியாமல்
கண் மண் தெரியாமல்
எதிரில்  வருபவர்களை
மிதித்து நசுக்கிக்கொண்டு
ஓடுபவர்களைதான் அப்படி சொல்வார்கள்.
ஆம்.
ஓட்டம் ஓட்டம் ரசிகர்களின் ஓட்டம்
சினிமா கொட்டகைகள் நோக்கி.
தெலுங்கு சீமையில்
பாகுபலி 2 வுக்கு கியூ வரிசை
பல கிலோ மீட்டர்களாம்.
எதற்கு இந்த ஓட்டம்.
கிராஃ பிக்சில்  ஒரு விநோத அம்புலிமாமா
கதைக்குத்தான்.
இது வரையுள்ள
வசூல் ரிக்கார்டுகளையெல்லாம்
அடித்து நொறுக்கி அள்ளிய
அந்த ஆயிரம் கோடி ரூபாய்களில்
அரண்டு போய் கிடக்கிறது
மொத்த சினிமா எனும் ஜிகினா உலகம்.
நம் தேசத்து புராணங்களில்
மழுங்கிப்போன நாம்
ஏன் அறிவு பூர்வமான நிகழ்வுகளையும்
சமுதாய நரம்போட்டமான
வரலாற்றுப் பக்கங்களையும்
குப்பையில் எறிந்துவிட்டு
அந்த சப்பளாக்கட்டைகளில்
நசுங்கிக்கிடந்தோம் என்று
இப்போது தான் தெரிகிறது.
மனம் நுரைத்த கற்பனைகளை
மின்னணுசித்திர  செதில்களாக்கி
"ஃ பேண்டாஸி " ரசமாய்
அருந்துவதே
இன்றைய சினிமா இலக்கியங்கள் ஆகும்.
ஃ பிரெஞ்சு நாவலாசிரியர் விக்டர் ஹ்யூகோவின்
சமுதாய முரண்களின் உயிர்ப்பை
நாவலாய்
இதயம் பிழிய காட்டிய "லே மிரேபிள் "
எனும் "ஏழை படும் பாடு" சினிமா
அன்று "கருப்பு வெள்ளையிலும் "
கண்ணீரின் கரிப்பையும்
ரத்தத்தின் சிவப்பையும்
வெகு அழுத்தமாக அல்லவா காட்டின.
"நாகையாவும்  ஜாவர்சீதாராமனும்"
இன்றைக்கும் நம் கண்ணில் நின்று
நம்  உள்ளம் கசிய
நிழல் காட்டி நிஜமாகி நிற்கிறார்கள்.
சமூகம் தன் முக பிம்பம்
பார்த்துக்கொண்டிருக்கும் போது
விழுந்து உடைந்து சிதறும்
கண்ணாடி சிதிலங்களே
நம் சரித்திரங்கள்.
பாகுபலிகள்  போன்ற
பொம்மைப்படங்கள் நம்
உண்மைப்படங்கள் ஆகாது.

==============================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக