புதன், 31 மே, 2017

மியூசியம்

மியூசியம்
===============================================ருத்ரா


 கூத்துப்பட்டறை ஆரம்பித்துவிட்டது.
ஆம்
கேலிகூத்துப் பட்டறை தான்.
"காலா" வில்
ரஜனி அவர்களால்
ஸ்டைலாக ஓட்டிச்சென்ற‌
அல்லது செல்லப்பட‌
வைத்திருக்கிற அந்த புழுதிபடர்ந்த‌
"ஜீப்பை"
ஒரு மியூசியம் ஆக்கி
களிக்க காத்திருக்கிறார்
அந்த கோடீஸ்வர தொழில் அதிபர்!
இந்த "அறிவிப்புக்கே"
கோடிக்கணக்கில்
அவருக்கு விற்பனை பெருகியிருக்கும்!
சாப்பிட்ட சாதாரண தட்டும்
அந்த மூக்குக்கண்ணாடியுமே
நம்நெஞ்சில் அடையாளங்கள் ஆகி
மியூசியம் ஆகிப்போன
அந்த தேசத்தந்தையின் மண்ணில்
இப்படி செட்டிங்க் ஜீப்புகள்
மியூசியம் ஆகும் காலகட்டம் காட்டுவது
நம் "வரலாறுகளின்" வறட்சியைத்தான்.
உயிரோட்டம் எனும் நீரோட்டம் இல்லாத‌
இந்த ஆறுகளா நம் தாகம் தீர்க்கும்?
மக்கள் ஈசல்களாக பறந்து சிதறுவது
அவர்களது ஜனநாயக உரிமை.
ஆனால் கிரேசி எனும் பைத்தியக்காரத்தனம்
தோரணங்கள் கட்டிக்கொண்டு
நம்மை ஆள குத்தாட்டம்போட்டுக்கொண்டு
வருவதில்
என்ன வெளிச்சம் வந்துவிடப்போகிறது.
காட்டுத்தீயில்
தீ அணைப்பு எஞ்சின்களுக்குத்தான் வேலை.
வழி காட்டும் தீபங்களில் தான்
மக்களின் விடியல் புத்தகம்
பக்கங்களை திறந்து காட்டுகிறது.

எங்கள் அன்பான ரஜனி அவர்களே!
உங்களுக்கு புல்லும் ஆயுதம் என்று
எங்களுக்கு தெரியும்.
அந்த புல்லைக்கொண்டு
ஆயிரம் இமயமலைகளை
இழுத்துக்கொண்டு  வரும்
பாகுபலிகளுக்கெல்லாம் அப்பனான
பாகுபலி என்றும்
எங்களுக்குத்தெரியும்.
முதல்வராக பதவி நாற்காலி அமர‌
நீங்கள் வரும்
ரத்தினக்கம்பளம் எல்லாம் ரெடி!
நீங்கள் முன்பு நதிகளையெல்லாம்
கோர்த்து விடலாம் என்று
ஒரு "பரம பத" விளையாட்டுக்கட்டம்
கொடுத்துவிட்டுப் போனீர்கள்.
அதில் பாம்புகளும் ஏணிகளும்
பின்னல் போட்டு சிக்கல்கள்
ஆனது தான்மிச்சம்.

எங்கள் உயிரினும் மேலான‌
சூப்பர் ஸ்டார் அவர்களே!
இப்போது நீங்கள் ஒன்று செய்யவேண்டும்.
உங்களை பூஜிப்பதற்கு
உங்கள் ஜீப்பை மியூசியம் ஆக்கத்
துடிக்கின்றவர்களுக்கு
ஒரு புதிய மியூசியம் ஒன்றை
திறந்து காட்ட வேண்டும்.
செத்துப்போன ஜனநாயகம் என்று
தலைப்பு வைக்க வேண்டும்.
அதனுள் இருப்பது இதுதான்.

"கரன்சியினால் செய்த
மின்னணு எலிப்பொறி" ஒன்று.
அருகில்
மசால்வடை கடித்த வாயுடன்
ஒரு எலி"
எல்லாம் சலவைக்கல்லில்!

அந்த மசால்வடையில்
சாதி மாதங்கள் தான் இன்னும்
முடைநாற்றம் வீசிக்கொண்டிருக்கிறது.
இதை முறியடிக்க
உங்கள் அரசியல் அறிவை
இன்னும் கூர்மையாக தீட்டவேண்டும்.
உங்கள் ஆத்மீகம் எனும் ஆயுதம்  கூட
சிந்துவெளித்தமிழன் எனும் திராவிடன்
தந்த கருத்தாக்கம் தான்.
மக்களின் நோக்கங்களை உள்வாங்கும்பொது
ஆத்மீகம் முனை முறிவது தான் நாத்திகம்.
அதுவே
மொகஞ்ச தாரோ ஹரப்பா கட்டிடம் எனும்
நம் தமிழிய திராவிட வரலாற்று எலும்புக்கூடுகள்.
நாத்திகம் எனும்
உலக மலர்ச்சியின் விளிம்புகள் தெறிக்கும்
விஞ்ஞான மகரந்தங்களை  மறுக்கும்
மாட்டு இறைச்சியின் மதம் பூசிய
அரிதாரங்களில் மாட்டிக்கொள்ளாமல்
வெற்றிகரமாய் வாக்குவங்கியை
காப்பாற்றுவதே
இப்போதைய உங்கள் "ஒரு வரிக்கதை"
திரைப்பட சாகசம் அல்ல இது.
நீங்கள் எழுதப்போகும்
"தரைப்படக்காவியம் இது"

================================================



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக