திங்கள், 8 மே, 2017

அம்மாவுக்கு ஒரு தினம்

அம்மாவுக்கு ஒரு தினம்
======================================ருத்ரா

ஆயிரம் யுகங்களைக் கூட‌
அடை காக்கும்
கருப்பைக் கடலுக்கு
ஒரு தினம் என்று
ஒரு துளி கண்ணீரை
துடைத்து எறிந்து விட்டு
எங்கே ஓடுகிறாய்
மனிதக்குஞ்சே?
மயிர்க்கால் தோறும் உன்
மனக்கால் ஊர‌
ஊறும்
அமுத உயிர் உன் அம்மா!
வயதுகள் நூற்றெட்டு ஆனாலும்
உன் நினைவே அவளுக்குள்
பலப்பல நூற்றாண்டுகள்.
மில்லியன் மில்லியன் ஆண்டு
டைனோஸார் எலும்புக்குள்ளும்
துருவிப்பார்
ஒரு தாயின் வாசனை
உன் சுவாசத்துள் சுவடு பதிக்கும்.
கோவில்கள் கூட
கிழிந்த பாயில் கிடக்கும்.
தெய்வங்கள் அதில்
பிள்ளை முகம் தேடி
சாக மறுத்து அடம்பிடிக்கும்.
புனிதங்களின் புனிதம் எல்லாம்
அதோ
அந்த முதியோர் இல்லங்களில்
அந்த வற்றிப்போன‌
எலும்புக்கூட்டில்
வாடாத பச்சை இலை தளிர்த்தது போல்
உயிர் துளிர்த்து துளிர்த்து
சிரித்து சிரித்துக் கிடக்கும்.
அவள் அன்பு தோற்றதில்லை.
தோற்றது மரணங்கள் மட்டுமே.

================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக