சனி, 13 மே, 2017

அம்மா தின வாழ்த்துக்கள்

அம்மா தின வாழ்த்துக்கள்
======================================ருத்ரா

அன்னையர் தின வாழ்த்துக்களை
அம்மா தின வாழ்த்துக்கள்
என்று
அழைத்தாலும்
அதில் ஒரு பெண்ணின் கண்ணீர் சமுத்திரமாய்
அலை அடிக்கும்.
ஆம்.
பலாத்காரமாய் மரணதேவன்
கதற கதற பாசக்கயிற்றை வீசி
எருமை வாகனத்தில் வந்து
ஒரு அம்மாவை இழுத்துச்சென்ற
காட்சி புதைந்த இடத்தில்
புல் கூட முளைத்து விட்டது.
அந்த மகத்தான அம்மா
குழந்தையாய் பிறந்தபோதே
அரசியலோடு கொடிசுற்றி பிறந்தார் போலும்.
ஒரு கொடியேற்றி கோலோச்சி
வாழ்ந்தபோது அவருக்கு
காலையில் முழிக்கும் சூரியன் கூட‌
"ஹெய்ல்...ட்லர்"என்று
விறைப்பாக சல்யூட் வைக்க வேண்டும்.
கூடவே தொற்றிக்கொண்டிருக்கும்
பிசாசு வேத மந்திரத்தின் வேதாளங்கள்
ப்ரசன்னம் என்ற பெயரில்
கிசுகிசுத்ததில்
தமிழின் பெண்மைச்சூரியனான‌
கண்ணகிசிலையைக்கூட‌
கடலில் எறியாத குறையாய்
எங்கோ ஒரு அழுக்குமூலையில்
கடாசி விடும் அளவுக்கு
திராவிடம் அல்லது தமிழின் மீது
கண்மூடிய வெறியில் அவ்வளவு வெறுப்பு
அவர்களுக்கு.
ஆனால் குடியிருக்கும் கொடியின் நிழலோ
பிரம்மாண்டமானதொரு திராவிடம்.
இந்த முரண்பாடு
தமிழ் மக்களின் சிந்தனைக்குள் கொஞ்சம் கூட‌
ஒரு கீற்று வெளிச்சம் தரக்கூடிய அளவுக்கு
அந்த சன்னலை திறந்து காட்டவே இல்லையே!
அது தான் தமிழ் நாடு.
அவர்கள் தான் தமிழ் மக்கள்.
இந்த நிலையிலும்
தமிழர்களுக்கு அவர்கள்
அம்மா தான்.
ஏதோ ஒரு சிக்மெண்ட் ஃப்ராய்டிச‌
அல்லது கிஸோ ஃ பெர்னிய
வலிப்பின் சாட்டைநுனிகள்
அவர்களை அப்படி சொடுக்கிக்கொண்டேயிருக்கலாம்.
இல்லையென்றால்
தமிழ் மண்ணின்
நரம்புகளோடு ஊடி நின்றவர்
எதிர்க்கட்சிக்காரர்
அச்சிட்டுத் தந்த‌
அய்யன் வள்ளுவன் படத்தின் மீது
ஏதோ தூக்குத்தண்டனைக்கைதியின்
முகத்தை மறைப்பது போல‌
"அப்படியொரு கருப்பு நிழலைக்கொண்டு"
தார் பூசியிருப்பார்களா?
பரிகாரம் செய்வது போல்
அப்புறம் தமிழ் அன்னைக்கு
உயிரற்ற அந்த காங்கிரீட் கட்டிடத்தை
பல நூறு கோடி கொட்டி
எழுப்பியிருப்பார்களா?
இன்றும் அது லஞ்சக்கழுகின்
கூரிய அலகையும் தீக்கண்களையும் தான்
படம் காட்டுகிறது.
அன்றொரு நாள்
ஆட்சியின் அடங்காத ஒரு உள் வெறி
அரங்கேறிய நாள்.
ஒரு பெண் மங்கலமாய்
கழுத்தில் அணியும் மெல்லிய நகையின்
ஏக்கம்
பல நூறு கோடிகளின்
வைரமாலையாய் அவர்கள் கழுத்தில்
ஏறியிருந்தது.
அது
குன்ஹா அவர்களின் தீர்ப்புக்காவியத்தின்
பேனாவுக்குள் மையாய்
ஒரு ஹெம்லாக் நஞ்சின்  ரசம் போன்று அல்லவா
அவர்களின் வாழ்க்கையின் அந்திச்சூரியனை
அகல விரித்து வைத்து விட்டது !
அது
அவர்கள் கழுத்தில்
மலையாய் கனத்திருப்பது
பிற்றை நாளில் ஏதாவது ஒரு தருணத்தில்
அவர்கள் இதயத்தை பிசைந்திருக்கல்லாம்.
இருப்பினும்
அந்த அம்மாவுக்கு இந்த மண்ணில்
வடிந்த கண்ணீர் வெள்ளம்
முந்தைய ஆண்டின்
ஊழிப்பெருவெள்ளத்தையும்
மூழ்கடித்து விட்டதே!
ஆம்
அந்த அம்மா உணவகம்
ஏசு தன் சதையை அப்பமாக பிய்த்துத்
தந்ததாகத்தான் உணர்கிறோம்.
அந்த அம்மா குடிநீர்
ஏசுவின் தெள்ளிய ரத்தம் தண்ணீர் ஆன‌
விந்தை வரலாறு தான்.
அம்மா மருந்தகம்...
மற்றும் அந்த "மருத்துவக்காப்பீடு "அட்டை...
மனிதர்களின் கொடுநோயை
தன் தங்கக்கையால் தடவி "சொஸ்தம்" ஆக்கிய‌
அன்னைத்தெரசாவை சித்திரமாக்கி நிற்கிறது.
தன் இறுதி அத்தியாயத்தில்
கருங்கல்லும் உருகிப்போகும் அளவுக்கு
எல்லோர் கண்களிலும்
கண்ணீர்த்துளியாய் திரண்டுநின்று விட்டார்.
அந்த அம்மா என்றும் வாழ்க!
எதிரிகளுக்கும் அவர்
அம்மா ஆகினார்.
தொண்டு கிழங்கள் ஆன‌
மனிதர்களுக்கும் அவர்
அம்மா ஆகினார்.
மானிட மனக்கசிவுகளுக்கு
தீவிர அரசியல் பகைகள் கூட‌
தூள் தூள் தூள் தான்.
அதோ தூரத்தில் ஒரு பசு
"ம்மா..." என்கிறது.
அது அந்த அம்மாவைக் கூப்பிடுகிறது.
நாமும் தான்.

=========================================================




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக