சிந்தனை வெள்ளம்!
==============================ருத்ரா இ பரமசிவன்.
நல்லது கெட்டது
தர்மம் அதர்மம்
உள் உயிர் (ஜீவாத்மா)
வெளி உயிர் (பரமாத்மா)
மேலும்
எச்சில் தெறிக்க
எத்தனை சுலோகம்?
முக்குணம் என்பீர்.
தமோ ரஜ சத் என்று
தர்ப்பை க் காட்டில்
குரலை எல்லாம்
கொளுத்துகின்றீர்
இருட்டு மனம்
வெளிச்ச மனம்
உண்மை உள்ளம்
எல்லாம் புக
நெய்யை வார்த்து
மெய்யைத் தேடினீர்.
சாதித்தீயில் ...மக்கள்
சாம்பற்பூக்கள் ஆனதைக்கொண்டு
ஆனந்தித்து
அர்ச்சிக்கிறீர்கள்!
கர்ச்சிக்கிறீர்கள்!
இன்னும் ..இன்னும்
சொல் அடுக்கி
பொருள் புதைத்து
என்னவெல்லாமோ சொல்கிறீர்கள்.
மனிதரில் பிளவு படுத்தல்
இதில்
எப்படி வந்தது?
அரசு ஆள்பவன்
ஒரு அமைப்பு செய்கிறான்.
அது உடையாமல்இருக்கவே
இந்த வேதம் சொல்கிறான்.
இப்படி "பேதம்" சொல்வதே
வேதம் ஆனதே!..பல
வேதனை ஆனதே!
ஒருவன் மூளை ஆளட்டும்.
அவனைக்கொண்டு
ஒருவன் அரசு ஆளட்டும்.
மூன்றாமவனோ
பணங்கள் ஆளட்டும்.
நான்காமவனோ
கை கட்டி பணிவுடனே
பண்டங்கள் ஆக்கட்டும்.
ஐந்தாமவனோ
எவர் கண்ணிலும் படாமல்
எங்காவது
இருந்து தொலைக்கட்டும்.
எம் மீது
அவன் காற்று பட்டால்
அவன் அழிந்தொழியட்டும்.
இதுவே இறைவன் செய்த விதி.
இது பிறள்பவன்
இறைமை மீறுகிறான்.
அவன் இல்லாமல் இருப்பதே
இறைவன் செய்த விதி.
சட்டம் செய்வோரே!
சட்டம் ஆள்வோரே!
இந்த உட்குறிப்பு தானே
உங்கள் சட்ட எலும்புக்குள்
"மஜ்ஜை"ஆனது.அணுக்கள் ஆனது.
மானிட மாட்சிமை எல்லாம்
மண்ணில் புதைவதற்கோ
செங்கோல் ஏந்த வந்தீர்!
சாக்கடை அள்ளுபவன்
இருட்டுகிட்டங்கியில்
கிடக்கவேண்டும்
என்று சொல்லும் தெய்வங்களை
அவர் வேதங்களை
சாக்கடையில் எறிவோம்.
ஒரு சாக்காட்டிலே புதைப்போம்!
அருள் நிறைந்த கடவுளுக்கு
இட்லர் வேடம் போட்டு
மனித சம நீதிக்கு
சமாதி கட்டி
சரித்திர திருத்தம் செய்ய
தகிடு தத்தம் செய்யும்
தந்திரம் எல்லாம் இங்கே
தவிடு பொடி ஆகவேண்டும்!
மானுடம் மறுக்கும் மதங்களுக்கு
மானுடம் மறைக்கும் கடவுளர்க்கு
மூடு விழா வேண்டும் இங்கே
மூடுவிழா வேண்டும்!
தராசு தூக்கி
வரலாற்றுத்தூசிகள் போக்கி
சம மனித நீதியை காக்க
வந்தது தானே "ஒதுக்கீடுகள் "
மற்றும் "பட்டியல்" பாது காப்புகள்.
அதனை சுரண்டி அநீதிகள் செய்ய
அமைவாய் வந்தது தானே
உங்கள் ஆட்சி.
புராணங்களில் புனிதம் தெளிக்க
இந்த
புதையுண்ட மக்களின்
ரத்தம் தானா உங்களுக்கு வேண்டும்?
சாதி மதங்களின்
பிளவு செய்யும் புற்று நோயை
நாற்று நட்டு பயிர் வளர்க்கும்
உங்கள்
சாணக்கியம் தான்
இந்த ஆட்சியின் குறியா?
தொன்மையிலும்
தொன்மை மிக்கதாய்
சுடரும் தமிழை
சுட்டுப்பொசுக்கவா
இந்த மொழி ஆக்கிரமிப்பு?
வாக்குப்பெட்டியில்
சாதி மத வெறியின்
மின்னணுப்பொறியினை
கொள்ளியாய் ஆக்கி
மானுடம் தகர்த்து
மந்திரங்கள் செய்யும்
உங்கள் ஆட்சி
உதிர்ந்து போக
சிந்தனை வெள்ளம் பெருகட்டும்.
மானிட நேய
சிற்பம் உயர்ந்து நிற்கட்டும் ...மற்ற
அற்பம் எல்லாம்
அடி பட்டுப்போகட்டும் .
சிந்தனை வெள்ளம் பெருகும் போது
மனிதவியல் சிந்தனைகள் பெருகும்.
சமுதாய இயலில் சமநீதி என்னும்
சிந்தனைப் பொறிகளும் பறக்கட்டும்
ஆம்!
சிந்தனைப்பொறிகளும் பறக்கட்டும்..
============================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக