திங்கள், 1 மே, 2017

பாட்டாளிகள் தினம்

பாட்டாளிகள் தினம்
===========================================ருத்ரா

பாழடைந்த மானுட வீட்டின்
சன்னல் திறந்த நாள் இன்று.
அடைத்த வீட்டின்
அழுக்கு வீசும் புழுக்கத்தை
அகற்றும்
சில்லென்ற காற்று வீசிய நாள்.
எட்டு மணி நேரம் வேண்டி
தியாகப்போர் செய்த‌
அந்த தொழிலாளார்கள்
அந்த சாளரம் திறந்த போதுதான்
இந்த உழைக்கும் உலகத்தின்
புதிய வானத்தின்
புதிய காற்று வீசக்கண்டார்கள்.
பத்தம்பசலி பொருளாதாரகோட்பாடுகளை
அந்த பிரிட்டிஷ் காரன் குகை எனும்
அந்த நூலகத்துள்ளிருந்தே
உடைத்து நொறுக்கி
சமுதாய பொருளியல் சிறகுகளைவீசி
மானிட சம தத்துவத்தின்
மின்னற்பறவையாய் மிளிர்ந்து வந்த
பேரறிஞன் கார்ல்மார்க்ஸ்!
"தாஸ் கேபிடல்" எனும் அவனது நூல்
எல்லாவற்றிற்கும் தீர்வு வைத்திருக்கிறது.
ஆதிக்க கூப்பாடு போடும்
அடிமை சாசன வேதங்களையெல்லாம்
வேரோடி கிள்ளிஎறிகிறது
அதன் பக்கங்கள்!
மனித உழைப்பும் சிந்தனையும்
சமுதாய பரிணாமங்களில் ஓட்டிய‌
தேரோட்டப்பதிவுகளே
இங்கு வரலாறு எனப்படும்.
மனித‌ வேர்வையும் ரத்தமும்
சாந்துபூசிய வடிவங்களே
இங்கு வரலாற்று நிகழ்வுகள் ஆகும்!
"பணம்"போடும் உரிமை என்னிடம்
இருப்பதால்
நீ "பிணம்"ஆகும் வரை
உன்னையும்
உன் மண்ணையும்
நீரையும் காற்றையும்   சுரண்ட‌
எனக்கு முழு சுதந்திரம் உண்டு
என்று
சுரண்டப்படுபவனின்
மொத்த சுதந்திரத்தையும் விழுங்கும்
ஒரு "பகாசுரப் பொருளாதாரத்தையே"
உலகத்தின் "வளர்ச்சிப்பொருளாதாரம்"
என்று பகடை உருட்டுகிறார்கள்.
இவர்கள் இன்று கும்பல் சேர்த்து
கும்மாளம் போடுவதுதான்
ஆட்சியியல் என்று ஆகிப்போனது.
அந்த அநியாயத்துக்கு
ஆணி அடிக்கும் வரை
ஓயாத காற்று
இந்த வேர்வையின் உப்புக்கரிக்கும் காற்று.
உப்பரிகை வர்க்கம் வெல வெலத்துப்போக‌
உழைக்கும் மக்களின் ஆட்சியே
உன்னத ஆட்சி.
அதன் சித்தாந்தம் எங்கோ
நிழல் மறைத்துக்கிடந்தாலும்
சாதி மத வெறிகள் அற்ற‌
நிறவெறிக்கொடுமைகள் அற்ற‌
அந்த‌
தூய வெள்ளி விடியலுக்கு
உருக்கி வார்த்து அடிக்கப்படும்
அந்த சம்மட்டி ஓசைகள்
உங்களுக்கு
இந்த விளம்பரக்குத்தாட்டங்களையும்
மீறி கேட்கின்றனவா?
அது போதும்!
மற்ற ஜிகினாக்கூச்சல்கள்
சீக்கிரமே தேய்ந்து போகும்.
என் இனிய தோழனே
உனக்கு என் வாழ்த்துக்கள்!

======================================



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக