ஞாயிறு, 7 மே, 2017

பாகுபலி.2

பாகுபலி.2
=============================================ருத்ரா இ பரமசிவன்.

ஆயிரம் கோடியைத்தாண்டி வசூல் சாதனை.
ஹாலிஉட்டோடு...ஏன்
ஹாலிவுட்டையும் மிஞ்சி ஓடும் வலிமை
"திராவிடத்தானுக்கு வந்து விட்டது"
(சும்மா தான் கோவிச்சுக்காதீங்கோ)
ஆம்! "இந்தியனுக்கு வந்து விட்டது"
பிரபாஸ் ராணா சத்யராஜ்
அனுஷ்கா தமன்னா ரம்யா கிருஷ்ணன்
இன்னும் எல்லாக்கலைஞர்களுக்கும்
மேலும்
ஏதோ ஒரு இருட்டு மூலையில் "லைட்  பாயாக"
உழைத்தவருக்கும்
எல்லாவற்றிற்கும் மேலாக
கணிப்பொறியின் மீது
நடனமிட்ட அந்த பொறியாள விரல்களுக்கும்
இந்த உலகத்தின் உயரிய விருது
அளிக்கப்படட்டும்!
இவர்களோடு அந்த‌
கிராஃபிக்ஸின் குதிரை  யானை....
மூன்று அம்பு தொடுத்த வில்.....
கட்டப்பா ஏன் பாகுபலியைகொன்றான்
என்ற‌
அந்த "பல அதிர்வுகளை"ஏற்படுத்திய‌
மண்டைக்குடைச்சலான கேள்வி...
ரத்தம் சொட்ட சொட்ட பச்சைச்சிசுவோடு
வீரம் கொப்புளிக்கும் ராஜமாதாவின் சபதம்
இன்னும்
ஈ எறும்புகளையெல்லாம்
வரிசையாய் அணிவகுக்க வைத்ததுபோல்
கணிப்பொறி தந்திர காட்சிகளின்
மிடுக்கான ராணுவ அசைவுகள்..
இதையெல்லாம்
ஒரு காமிராலென்ஸில்..அற்புதமான‌
"காக்டெயில்" ஆக்கித்தந்த‌
அந்த "ராஜமௌலி"யின் மேல்ஒரு
விலைமதிப்பில்லாத‌
வைரங்களின் திரட்சியில்
நாம் ஒரு "கலைக்கடல்" எனும்
பிரம்மாண்ட மௌலியை (மகுடத்தை)
சூடுவோமாக!
கபாலின்னா நெருப்புடா என்று
பூட்ஸ்கால் தேய்த்து பொறி பறக்கவைத்தது
போல்
"பிரபாஸ்னா பிரளயம்டா"
என்று எல்லோரையும்
திகிலடையச்செய்துவிட்டார் "பிரபாஸ்"!
ஆறாயிரம் கன்னிகளின்
கல்யாணக்கனவுகளுக்குள்
தூக்கணாங்குருவிக்கூடுகள்
ஊஞ்சலாட வைத்த பிரபாஸ்க்கு
"டைம்" இதழ் அட்டைப்படங்கள் எல்லாம் போதாது!
இமயங்கள் எல்லாம் இவர் காலடியில்
கூழாங்கல் ஆன பின்னே
இவரின் உயரம் கண்டு வியந்து நிற்கிறோம்.
கீரவாணி அவர்களின் இசை
அந்த படத்தின் பரப்பு முழுவதும்
ஒரு கம்பீர அதிர்வையும்
ஒரு மெல்லிய யாழின் இனிய சாரலையும்
கலந்து தருகிறது
அதெல்லாம் சரி!
படத்தின் தீம்
கிராஃபிக்ஸின் ரத்தமும் துடிப்பும் தானே.
கொஞ்சம் சிறுவர்களுக்கான வீடியோகேம்ஸில்
மீசை முளைக்க வைத்து
அந்த அட்டையின் கோட்டை கொத்தளங்களுக்குள்
ராஜாக்களின் சாணக்கிய கீற்றுகளுக்கு
தங்கமுலாம் பூசிய போர்த்தினவுகளின்
வண்ணப்பிழம்புகள் தானே!
ஒரு சமுதாயம்.
அதன் மக்கள்
அவர்களின் கண்ணீரும் ரத்தமும்
மெகந்தி வரையும்
இலக்கிய சிலிர்ப்புகள்
உள் எழுச்சிப் பொங்குதல்கள்
இவை எல்லாம்
இல்லாத
உயிர் வற்றிய சித்திரம் தான் இது.
ஒரு ஈழத்து தென்னை மரங்களின்
அடியில் ஒரு மொத்த இனமும்
கபால எலும்புகளின் உரமாய்ப் போய்விட்ட‌
வஞ்சகக்கதையின் அடியொற்றிய
சுவடுகளில் தமிழன் விடும்
அமிலக்கண்ணீர்த்துளிகளையும்
கலந்து பிசைந்துக்கொண்டு தான்
இதைப்பார்க்க வேண்டும் என்ற‌
ஒரு பொய்மை ஏக்கமும்
ரத்தமாய்
மனத்தின் ஏதோ ஒரு விளிம்பில் கசிகிறது.
இதற்குள் போய் ஒரு சத்யஜித் ரேயை
தேடுவது
பார்வையற்ற‌
அந்த ஐந்துபேர்கள் யானையைத்தடவிய கதை தான்.
ஒரு அம்புலிமாமா கதை தான் என்றாலும்
அதற்கு கோஹினூர் வைரத்தால்
"அட்டை போட்ட" ஒரு
அருமைச்சித்திரம் இது.
இதன் படைப்பாளிகள் எல்லோரும்
அந்த கச்சாபிலிம் சுருளை அற்புதமான‌
"பிரம்மச்சுவடிகள்" ஆக்கியிருக்கிறார்கள்.
அவர்களுக்கு
என் மனம் நெகிழ்ந்த‌
என் மனம் நெக்குருகிய‌
பாராட்டுகள்!

===========================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக