திங்கள், 8 மே, 2017

என்ன செய்யலாம் இந்த தமிழ்நாட்டை?

என்ன செய்யலாம் இந்த தமிழ்நாட்டை?
======================================================ருத்ரா


என்ன செய்யலாம் இந்த தமிழ்நாட்டை?
சாணக்கியபுரியில்
தினமும் இந்த சிந்தனை தான்!
"நான் ஆணையிட்டால்..."
என்று எம் ஜி ஆர் பாணியில்
சவுக்குகள் சொடுக்க பலவாறாய்
துருப்பு சீட்டுகள் கையில்!
இருப்பினும் முன் வாசல் வழியாகத்தான்
நாங்கள் வருவோம் என்று
தினமும் பிரகடனங்கள்.

அப்படியென்றால் அந்த கூர்மையான‌
சவுக்கு நுனிகள் இன்னும்
ஏன் அந்த முதுகுகளில்
கிச்சு கிச்சு மூட்டிக்கொண்டிருக்கின்றன.

எதிர்க் கட்சி ஒன்று
அந்த அரசியல் முக்குளிகளில்
தலை நீட்டி சீறிக்கொண்டு தான் இருக்கிறது.

ஈகோ எனும் புற்றுநோய் பற்றிக்கொண்டதிலே
ஈசல் கூட்டங்களாய் கிடக்கின்றாய்
என் அருமைத்தமிழா!

பிரச்னைகள் எத்தனை? எத்தனை?
சொல்லி மாளாது.
விவசாயிகளின் வறட்சிப்பிரச்னை.
ஆறுகள் ஏரிகள் வறண்டு
குடிநீர் பிரச்னை
காவிரி நடுவர் மன்ற பிரச்னை
நீட் தேர்வு பிரச்னை
மருத்துவர்கள் அம்பது சதவீத ஒதுக்கீட்டு பிரச்னை
ஹைட்ரோ கார்பன் பிரச்னை
ஊழல் ஊழல்
எங்கும் ஊழல்.
எதிலும் ஊழல்.
கத்தையாக எவனாவது
சில நோட்டுகளைக்கொடுத்தால் போதும்
"அமுதுக்கும் தமிழ் என்று பேர்"
என்ற வரியையும்
அந்த ஆதிக்க மொழியான் காலடியில்
வைத்து விடுவான் நம் தமிழன்.
இந்தி எனும் பேய்த்தீ மத்திய அரசின்
கஜானா கர்ப்பத்திலிருந்து
கொழுந்து வீசிக்கொண்டு வருகிறது.
தமிழா !நீயும் வருமுன் காவாதானாயிருந்தால்
"எரி முன்னர் வைத்தூறு போலக்கெடும்"
நம் செம்மொழி என்று
உணர மாட்டாயா?


நீ பேசாமல் இருந்தால்....
உன்  முதுகையே மைல் கல்லாக்கி
ஊர் பேர் தூரம் எல்லாவற்றையும்
இந்தியில் "பொறித்து"விட்டுப்போய்விடுவார்கள்.
உன் ஊரும் பேரும் தெரியாத
ஊமையானாய் ஆன பிறகு நீ
"யாதும் ஊரே யாவரும் கேளிர்"
என்று முழங்கி என்ன பயன்?


குடியரசு தலைவர் வரை போய்
"பிராது" கொடுத்தாலும்
யெ ராஷ்ட்ர பாஷா ஹை என்று சொல்லிவிட்டு
சேம்பருக்குள் போய் உட்கார்ந்து கொள்வார்கள்.

எல்லாப்பிரச்னைகளுக்குள்ளும்
அடியாய பிரச்னை
நம் அடையாளப்பிரச்னைதான்.
உயிரான பிரச்னை தான்!
நம் உயர்தனிச்செம்மொழியான தமிழ்...தான்
நம் "ஆதார் அட்டை ..மெமரி கார்டு ..பாஸ் வர்டு" எல்லாம்.
தமிழா
நன்றாய் உற்றுப்பார்
நீயே...தமிழை..
உன் காலடியில் மிதித்து நசுக்கிக்கொண்டிருக்கிறாயே!
இது தான் இப்போதைய பிரச்னை!
மாற்றான் தோட்டத்து மல்லிகையை
உன் காதில் வைத்துக்கொண்டு
சினிமாப்பல்லக்குகள் தூக்கிக்கொண்டு இருக்கிறாய்.
உன் தலைமீது அந்த மாற்றன் தோட்டமே
உட்கார்ந்து உன்னைப் புதைக்க வந்து விட்டதே!
உனக்கு ஒரு ஆண்டவனைக்காட்டுகிறேன்
என்று
உன் மீது கொட்டிக்கவிழ்க்கும்
அர்ச்சனைகள் எனும் இரைச்சல்களில்
எதனைக்கண்டாய்?
சவத்து மொழி "சப்தங்களின்"
மார்ச்சுவரிக்குள்ளா
உன் வெளிச்சம் தேடினாய்?

கழுத்துவரை புதைந்து விட்டாய்.
உன் கண்களையும் செவிகளையும்
வாய்ச்சொல்லின் உரத்த குரல்களையும்
அந்த ஆதிக்கங்கள் விழுங்க வைத்து விடாதே!
அந்த "வாக்குரிமை" மட்டுமே இப்போது
உன் ஆயுதம்.
அந்த கரன்சிகள் அதையும் விழுங்கிவிடுவதற்குள்
சிலிர்த்துக்கொண்டு எழு!
திமிறிக்கொண்டு நில்
கிளர்ந்து உணர்ந்து செல்!
இந்த மண்ணுக்குள் தான் உன் குரல்!
இந்த மண்ணுக்குத்தான் உன் குரல்!
இந்த குரலுக்குள் தான் உன் மண்!
தமிழ் வெல்க!தமிழ் வாழ்க!
நம் தமிழ் என்றும் வாழ்க!வாழ்க!!

================================================








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக