சனி, 19 நவம்பர், 2022

பட்டினத்தாரும் கொண்டைவைத்த பம்பரமும்

 பட்டினத்தாரும் கொண்டைவைத்த பம்பரமும்

__________________________________________________

ருத்ரா


காதறுந்த ஊசியும் வாராது காண்

கடைவழிக்கே

வாழ்க்கையே ஒரு தத்துவம்.

இது வாழ்க்கையை 

கரடு முரடாய் பார்க்காத‌

தெருவில் பம்பரம் விளையாடும்

சிறுவர்களின் மகிழ்ச்சிக்குமிழி ஒன்று

மூச்சு விடும் தருணங்களின்

அடிவயிற்றுக்கடல்.

ஊசிமுனைக்காதில் ஒட்டகங்கள்

நுழையலாம்

பணக்காரர்களுக்கு சொர்க்கம் இல்லை.

ஏழைகளாக இருப்பதே

இறைவனுக்கு மிக அருகில் 

இருக்கும் இடம்.

இறைவன் என்றால் கொம்பு முளைத்தவனா என்ன?

இந்த இறுமாப்பு தான்

விடுதலை பெற்ற எண்ண ஒழுக்கு.

இறைவன் அருகே இருப்பவன் தான்

இப்படி பட்டவர்த்தமான மொழியில்

இறைவனை உற்றுப்பார்க்க முடியும்.

பணம் என்றால் இறைவன் தான்

என்ற‌

ஒரு மொழிபெயர்ப்பு இருக்கிறதே.

அதுவும் பெண் உருவில் அழகாகவே

இருக்கிறது.

பண மறுப்பு வாதம்

கடவுள் மறுப்பு வாதம் அல்ல.

எல்லோரும் 

மகிழ்ச்சியாய் இருப்பது.

எல்லோருக்குள்ளும்

கடவுள் இருப்பது

அல்லது

அப்படி எதுவுமே இல்லாமல்

ஒரே வெள்ளையாய் கருப்பாய்

இருப்பது.

இப்படி பம்பரம் விடுவது எல்லாம்

உருமா கட்டப்படும் அடையாளம் தான்.

கூடவே நடந்துவரும்

இன்னொரு மனிதனுக்கு

கோரைப்பல் கொம்பு இருப்பதாய்

பகைப்புகை எப்படி கிளம்புகிறது.

ஒரு குருட்டுத்தனம்

வெறித்தனம் ஆகி

கொழுந்து விடுகிறது.

ஏதோ ஒரு பயம் இருட்டாய்

அதுவே பயமுறுத்தும் நிழலாய்

விரிகிறது.

சரி போகட்டும் வெறும் நிழல் தானே!

அதை கொஞ்சம் உற்றுப்பார்ப்பதற்குள்

எத்தனை

ரத்த ஆறுகள்?

எத்தனை எத்தனை

கபாலக்குவியல்கள்?

மனிதப்பரிமாணம்

மனிதனை விட்டு கழன்று விடுகிறது.

அப்புறம்

வரலாறுகள் கூர்மை மழுங்கி

மூளியாகி விடுகின்றன.

மீண்டும் எப்போது

கண்ணைத்திறக்கும் 

வெளிச்சம் வரும்.

மண்டையில் வெறும் கொண்டை வைத்த‌

பம்பரங்கள்

இங்கே சுழன்றுகொண்டிருக்கின்றன.

நிற்கும் போது 

திசைகள் அழிந்து

சுழன்று கொண்டேயிருக்கின்றன.

_______________________________________________________










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக