நீ மட்டும் தான்.
_______________________________________________
ருத்ரா
ஜாபாலா முனிவர் சொல்லுகிறார்.
"புருவமத்தியில்
அவிமுக்தம் எனும்
குண்டலினியின்
உச்சாங்கிளை இருக்கிறது.
அதற்கு சன்யாசம் எனும்
கோடரி கொண்டு
அடிக்கிளையான அறிவுகளை
வாழ்க்கை முடிச்சுகளை
வெட்டிவிடு " என்று.
வீடு எனும் முக்தி பற்றி.
எதிலிருந்து எதற்கு விடுதலை வேண்டும்?மனித சிந்தனையில்
எப்பொழுது தேக்கம் ஏற்படுகிறதோ
அப்பொழுது தான்
பாழ்வெளிகள் தோன்றுகின்றன.
ஆம்.
அந்த அழகிய பூமி கூட
அவனுக்கு சூன்யம் ஆகிவிடுகிறது.
பிறக்கிறாய்
இறக்கிறாய்.
எதற்கு பிறந்தாய்?
எதற்கு இறந்தாய்?
இந்த கேள்விகள்
வெறும் மொக்கையானவை.
ஆன்மீக பொக்கிஷம்
என்று
வெறும் புழுக்களாய்
நெளிந்து கொண்டிருப்பது தான்
இந்திய தத்துவம்.
ஐரோப்பியன்
உயிரின் உந்துதலை உணர்ந்து
உயிர்ச்சங்கிலியின்
முன்னும் பின்னும் பார்வையிடுகிறான்.
இந்த இன்டர்பொலேஷன் எக்ஸ்ட்ராபொலேஷனில்
காலம் எனும் முழுமையை
ஆராய்ச்சி செய்கிறான்.
சும்மா நடந்து கொண்டிருந்தவன்
பறவையின் இறக்கையை
மாட்டிக்கொள்ளலாமா என்று நினைக்கிறான்.
காற்றுப்படலங்களுக்குள்
படுத்துக்கொண்டிருக்கிற
வெளியையும் அதனுள்
நெசவு செய்து கொண்டிருக்கும்
மின்காந்தப்படுகையையும்
தொட்டுப்பார்த்து விடுகிறான்.
அது அறிவின் புரட்சி.
அதி சிந்தனையின் வெளிச்சம்.
இங்கே
பிறப்புக்கும் இறப்புக்கும்
இடையே இருக்கிற சூன்யம்
நம்மை என்னவோ பாடாய் படுத்துக்கிறது.
அப்போது
அவனுக்குக்கிடைத்த முட்டுச்சந்து
பிரம்மம்.
உயிர்களே போதும்
நீங்கள் உண்டு உடுத்து உறங்கியது.
உங்கள் எலும்பு சதைகளை
உரித்து எறியுங்கள்.
உயிர்க்குப்பின் நீங்கள் உலாவ
ஒரு திடல் உண்டு.
ஒரு இன்பத்தீவு எனும் சொர்க்கம் உண்டு.
அதுவே முக்தி.
அதை நோக்கி நடக்க
ஒரு ஊன்றுகோல் உண்டு
அது பிரம்மம்.
பாருங்கள் அந்த முட்டுச்சந்து
அவனுக்குள் ஒரு
மன முறிவை ஏற்படுத்துகிறது.
அதன் ஊளையும் ஊங்காரமும்
வெறி கொள்கிறது.
பேதங்களின் தோற்றங்களில்
மனிதம் எனும் வெளிச்சத்தையே
வேண்டாம் என்று
மரண குழிக்குள் சமாதியாவதையே
பிரம்மம் என்கிறது.
மனித மதிப்புகள்
வர்ணங்களுக்குள் எரிந்து போகின்றன.
வெறியோடு
எதையோ எதுவோ
ஆதிக்கம் செய்வதே பிரம்மம்
என்று கூப்பாடு போடுகிறது.
அந்த கூச்சல் மொழி
வெட்டியானாய் மாறி
மனிதத்தையே சுட்டுப்பொசுக்கி
சாம்பல் ஆக்குகிறது.
மேலை அறிவு வாசனையைக்கொண்டு கூட
இந்த வெறியின் வேதாந்தம்
அக்கினி வளர்த்துக்கொண்டே இருக்கிறது.
மனிதா
உன் மோட்சம் முக்தி எல்லாம்
இந்த பொய் அறிவின் தேக்கத்தை
உடைத்து நொறுக்குவது தான்.
குப்பையாய் மக்கிக்கிடக்கும் மக்களின்
அறிவுச்செதில்களிலிருந்து
பெரு வெளிச்சம் தோற்றுவிப்பது தான்.
மனித ஆளுமையின் நிழல் தான்
ஆத்மா.
நிழல் ஏற்படுத்தும்
முதல் அறிவை
மனித மலர்ச்சியை
அழித்து விட்டால்
ஆத்மா ஏது? பிரம்மம் ஏது?
இந்த பிம்பங்களுக்கு
இவர்கள் கும்பாபிஷேகம்
நடத்திக்கொண்டிருக்கட்டும்.
அறிவின் ஒளி நோக்கி
இந்த பிரபஞ்சங்களின் ஜியாமெட்ரியை
மாற்றி அமைத்து
புதிய கணித தேற்றங்களை எழுது.
கடவுள் என்ற
பாறாங்கல்லை
உன்னை இடறவிடாதே.
அதைப் படி பரவாயில்லை.
அல்லது
உன் படிகளாய் செதுக்கிக்கொண்டு
அதையும் மீறிச்செல்.
வெளிச்சமே எல்லாம்.
அதற்குள் ஒரு
இருட்டு ஆற்றலும் இருட்டுப்பிண்டமும்
டார்க் எனர்ஜி..டார்க் மேட்டர் என்று
மொத்தமாய் மூளியாய்
திரண்டு இருக்கும் விஞ்ஞானத்தையும்
தோலுரிப்பவன் மனிதனே.
மனிதா
அது நீ தான்.
நீ மட்டும் தான்.
_____________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக