கனவுக்குள் கனவாய்...
____________________________________
ருத்ரா
ஒரு கனவு காண்பதாக
ஒரு கனவு.
கடவுளை
கனவுகளின் கனவாகத்தான்
தரிசிக்கிறோம்.
தூக்கத்தை சுற்றிவைத்துக்கொண்ட
ஒரு விழிப்பின் கணப்பில்
கண்களின் உள் நெருப்பில்
கடவுளை
வார்த்துக்கொள்கிறோம்.
என் முகத்தில் மற்றவர் முகம்.
மற்றவர்கள் முகத்தில்
என் முகம் என்று
ஆயிரமாயிரம் பிம்பங்கள்
கருவுற்றதில்
உருவு தெளிவு இல்லை.
நிழல்களின் நெளியல்களும் சுழியல்களும்
இங்கு
ஒவ்வொரு பாஷ்யங்கள்.
மனிதனுக்குள் கடவுள்
கடவுளுக்குள் மனிதன்
என்று மந்திரம் சொல்லிவிட்டு
அப்புறம் ஏன்
அசிங்கமாய் இந்த
நாலு வர்ண பிலாக்கணங்கள்?
கொன்றுவிட்ட கடவுளை
பிணமாக நிறுத்தி வைத்துக்கொண்டு
எதற்கு இத்தனை
நைவேத்தியங்களும் அர்ச்சனைகளும்?
இருங்கள்..
சற்று பொறுங்கள்.
எங்களுக்கு மனம் புண்பட்டு விட்டது
என்று தானே
சொல்லப்போகிறீர்கள்.
தினம் தினம் உங்கள்
மொக்கைச்சொற்களைக்கொண்டு
தாக்கு தாக்கு என்று
தாக்கியதில்
புண்பட்டு குற்றுயிரும் குலைஉயிருமாய்
கிடக்கிறாரே கடவுள்..
அதற்கு யாரை சிறை வைப்பது?
உங்களையா?
உங்கள் கூச்சல் பாஷைகளையா?
___________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக