புதன், 2 நவம்பர், 2022

யார் அவள்?

 யார் அவள்?

______________________________________



தென்காசியிலிருது கொல்லத்துக்கு

ரயிலில் பயணம்.

ரயில் ஆரியன் காவு குகை வழிக்குள்

புகுந்து 

கொஞ்சம் இருட்டு சதையை

பிய்த்துக்கொண்டு

நம் மீது கொஞ்சம் சுவாரஸ்யமான‌

திகில் பூச்சு பூசி விட்டு

வெளிச்சத்துக்கு வந்தது.

"ஆர்யன்"என்பதில் அந்த "ஆர்"

தமிழின் ஆழம் நிறைந்த வேர்ச்சொல்.

சங்கத்தமிழின் எல்லா சொற்களிலும் 

ஒரு உயிர்ப்பொருள் பூசி நிற்கும்

தனிச்சொல் உரிச்சொல் அசைச்சொல்.

அது உலக மொழிகளிலும் வேர்பிடித்து

அப்புறம் 

கைபர் போலன் கணவாய் வழியே 

எப்படி இந்த "வெறி" பிடித்து

தமிழையே அரிக்கும் கரையான் ஆனது?

எப்படி இருப்பினும் 

வாழ்க அந்த தமிழ்க்கரையான்.

தமிழால் தமிழும் வீழும் என்பது

இது தானோ?

சேர நாடு கேரளநாடு ஆகி 

தமிழை நோக்கி அது ஒரு

ஏளனப்பார்வையை வீசுவதும்

ஒரு வேதனையான வேடிக்கை தான்.

அவர்களின் வரலாற்றுத்தடங்கள் 

நம் பதிற்றுப்பத்தில் பதிந்து கிடப்பது

ஆராய்ச்சியாளர்களுக்கு மட்டுமே தெரியும்.

மலையை ஆளும் நம் மலையாளச்சேரன்

சமஸ்கிருத புகை மண்டிப்போனதால்

அவனுக்கு நாமே கூட மிலேச்சன் 

ஆகிப்போனோம்.

சரி.போதும்.

அந்த தலைவலிக்கு ஏதோ ஒரு 

ஆயின்ட்மென்ட் தடவி விட்டு

மடியில் கிடக்கும் நிகழ்கால‌

நேனோ செகண்டுகளுக்குள் 

படிவோமாக!

ரயிலின் ஊர்வில் என்

கனவுப்பொதிகளும் ஊர்கின்றன.

வெளியே பச்சைத்திட்டுகள் 

மரங்களின் பசுமைக்கொத்துகள்

குவியல் குவியலாய் தென்னைகள்

கூந்தலை சிலுப்பிக்கொண்டு

எங்களுக்கும் தலை வாரி 

பூ முடித்துவைத்துப்போங்களேன்

என்ற ஏக்கத்தை 

அசையும் சித்திரங்களாக்கின.

சின்ன சின்ன ஆறுகள்

பாம்புகளாய் நெளிந்து ஓடின.

அப்புறம்

அந்த தடக் தடக் ஒலி

தாலாட்ட 

ஒரு இனிமையான மௌனத்துள் 

மூழ்கினேன்.

வளைந்து வளைந்து

வளையல் பூச்சி மாதிரி

ரயில் பெட்டிகள் இழுத்துக்கொண்டு

நகர்ந்தன.

அந்த தண்டவாளங்களில்

சக்கரங்கள் மெல்லிதாய் 

சிணுங்கிய குரலில்

கண்ணுக்குத்தெரியாமல் 

அந்த கொலுசுகளை

ஒலித்துக்கொண்டிருக்கிறாளே

யார் அவள்?

_______________________________

ருத்ரா




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக