திங்கள், 28 நவம்பர், 2022

கோடு

 கோடு

_________________________________

ருத்ரா




மூச்.

இதற்கு மேல் பேசாதே

எதையும் கேட்காதே

எதையும் பார்க்காதே

ஒரு குரல்

நம் பிடறிக்குப்பின்னே

நம்மை இழுத்து நிறுத்தியிருக்கிறது.

அறிவு என்பது

கோடுகளை உடைப்பது.

விளிம்புகளை கடப்பது.

வாசல்களை திறப்பது.

அச்சம் எனும்

துருப்பிடித்த பூட்டுகளை

அடித்து நொறுக்குவது.

முன்னே ஒரு குரல்

நம்மை ஈர்க்கிறது.

இருட்டுக்குள் 

மேலும் ஒரு இருட்டான‌

கோட்டை தாண்ட அஞ்சிய கால்கள்

முடமாகின.

விளிம்பு எனும் ஊசி முனையில்

நின்றுகொண்டு

விழாமல் நிற்கிறோம்

கையில் சிந்தனைச்சுடர் ஏந்தி.

ஒரு சிறுவன் வரைந்த‌

கோட்டுச்சித்திரமாய்

பிரபஞ்சங்கள்

மேல் அடுக்கிய‌

கோடி கோடி பிரபஞ்சங்கள்.

கோடு ஆவியாகி அகன்றது.

விளிம்பு எல்லாம் நம்

சொகுசு மாளிகை ஆனது.

நமக்கு விளக்கு ஏந்த

குட்டிச்சூரியன்கள்.

நியூகிளியர் ஃப்யூஷன் 

எனும் அறிவின் திறவுகோல்

இந்த இருட்டுப்பிழம்பையே

பழரசம் ஆக்கி நீட்டுகிறது.

மனிதனின்

துளியிலும் துளியாய்

இருக்கும் 

உந்து விசை

குவாண்டமாய்

கிரீடம் சூட்டிக்கொண்டிருக்கிறது.

மனித ஆற்றலின்

வர்ணமற்ற வர்ணத்துக்கா

பொய்மைப்புருசுகொண்டு

வர்ணம் தீட்ட வருகிறீர்கள்?

சோமச்செடி என்றாலும் 

கஞ்சாச்செடி என்றாலும்

போதை போதை தானே.

அது கடவுளின் குரல் என்று

உங்கள் மூலம் 

பாஷ்யங்களாய்

எங்களை ஏமாற்றியது எல்லாம்

புரிந்து கொண்டோம்.

அறிவே அகண்ட மானிடம்.

மற்றக்

குப்பைகள் எல்லாம் அகலட்டும்.


______________________________________________





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக