திங்கள், 14 நவம்பர், 2022

சிலம்பு நக இயலி..

 சிலம்பு நக இயலி..

__________________________________________

சொற்கீரன்.


கருங்கால் ஓமை பைஞ்சினை அமரும்

வெண்குருகு நரல அயல நான்ற சில்பூ அதிரும்.

மண்ணிடை ஊழ்க்கும் வள்ளியெனப் படர்ந்து

வரிபூ காட்டும் சுரனிடைத் துணிந்தாள் மன்னே.

சூர் உடை இருள் வெளி கண்டும் அஞ்சா

விழி உறுத்து எதிர்வரு கவலை யாறும்

கணித்து முன் சென்றாள் குறி எதிர்த்தாங்கே.

சிலம்பு நக இயலி வணர் குரல் மூசி

கடுங்கால் அறைமுகம் கடுப்பவும் ஆனாது

ஆடமை புரையும் தோள் திரள் அகலன்

அழ்தரு நகையின் களி மூழ்க விரைந்தாள்.

வட்டில் சோறு மறுத்தாளாய் கட்டில் படுத்தாங்கு

துஞ்சுதலும் இயலாள்.தகரம் மண்ணாள்

பூவும் தொடையா பாழ்நிலைக்கூந்தல்

நறும்புகை யறியாக் கிடந்தாள்

அண்ணல் முகம் நோக்கும் நோக்கம் அன்றி

மறு நோக்கு மறுத்து மற்று ஆறும் தவிர்த்தாள்.

வேழம் முற்றிய பழனத்திடையே ஒரு

வேங்கைத்திட்டில் சிலம்பிய பண்ணின்

குறியாங்கு எய்தும் கூர்பட நடந்தாள்.

பிரிதின் வெஞ்சிறை தகர்த்திடும் நடையில்

அஞ்சிறைதும்பி ஆர்த்திடும் மரத்த‌

வரிநிழல் குறியிடம் சேர்ந்திடும் விசையில்

கலிமாவன்ன பாய்பரி தன்னில்

காற்றையும் பிளந்துக் கடுகினள் ஆங்கே.


______________________________________________________


அவள் அவனைக்கண்டதும் காதல் கொண்டாள்.

அவனைக்காணாது ஒரு கணம் இருக்க முடியாதாளாய்

பிரிவு நோய் மிகுந்து வேதனையுற்றாள்.தோழி மூலம்

அவனை ஒரு இடத்தில் சந்திக்க முனைந்தாள்.இப்படி

ஒரு இடம் "குறி" செய்து காதலர்கள் சந்தித்துக்கொள்வது

சங்க கால மரபு. காதலர்கள் தற்போது இப்படி சந்தித்துக் 

கொள்வது தற்காலத்திலும் உண்டு என்பது நாம் அறிவோம்.

அப்படி அவள் ஒரு வேங்கை மரம் இருக்கும் இடமே

இங்கு "குறி"யாக தோழி மூலம் அவள் அறிந்தாள்.

அந்த குறித்த இடம் ஒரு அடர்ந்த காடு.அந்த அடர்

சுரத்தையும் கடக்கத்துணிந்து செல்லுகின்றாள்

என்பதையே நான் எழுதிய இந்த சங்க நடைச்செய்யுள்

கவிதை சொல்கிறது.


_______________________________________________சொற்கீரன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக