புறப்படடா தமிழா!
_______________________________________________________
ருத்ரா
புறப்படடா தமிழா!
புறநானூற்றுத்தமிழா!
தமிழை அழித்து
தமிழினம் அழிக்க
வருகின்றது இங்கே ஒரு கூட்டம்.
வரு பகையும் உறு பகையும்
கருவறுக்கும் திடம் கொள்ளும்
கடமையுடன் தமிழா!
புறப்படடா தமிழா!
புறநானூற்றுத்தமிழா!
மாடு பிடிக்கும் போரில்லை!
நாடு பிடிக்கும் போரில்லை!
ஏடு காக்கும் போர் இது_தமிழ்
ஏடு காக்கும் போர் இது.
வாள் பிடிக்கத் தேவையில்லை..வெறும்
ஆள் பிடிக்கவும் தேவையில்லை.
தமிழ் இனம் காக்கும் போர் இது.
தமிழ் மொழி காக்கும் போர் இது.
எதிரி புதிதாய் வரவில்லை
எதிரிலும் அவன் வரவில்லை
பல நூறு ஆண்டுகளாய் நம்
பக்கம் இருந்தே தாக்குபவன்.
மதம் என்றும் பக்தி என்றும் நமை
மக்கச்செய்த மந்திரமாய்
இரைச்சல் மொழியாய் நம்மவரை
இற்றுப் போக வைக்கின்றான்.
சாதித்தீ எனும் காட்டுத்தீயை
சாத்திரம் சொல்லி வளர்க்கின்றான்.
அடுக்கு அடுக்காய் தமிழர்கள்
அடங்கிக் கிடந்தனர் சாதிகளில்.
தன்னையே பிரமனின் புத்திரனென்று
தந்திரவரிகள் பலவாய் சொல்லி
மற்றவர் தலையில் ஏறிநின்றான்.
மணியை ஆட்டி பூசைசெய்து.
அடுத்தவர் எல்லாம் அடிமையென்று
அதர்மமாய் சுலோகம் சொல்லுகின்றான்.
புனிதமாய் வேதம் சொல்லியதென்று
புனைந்தான் பலப்பல புராணங்கள்.
என்ன புனிதம் என உற்றுக்கேட்டால்
எல்லாம் வெட்ட வெளிச்சம் தான்.
ஊற்றிக்கொண்ட சோம பானம்
உளறிய பாஷையே தேவ பாஷை.
வேதம் வருமுன் இம்மண்ணில் இருந்த
மொழியே நந்தம் தமிழ் மொழியாம்.
கடல் கடந்து ஒலிகள் திரட்டி
கடற்கரையெல்லாம் தமிழே ஒலித்தது.
வேறு வேறு இடம் பெயர்ந்தவர்
வேர்ச்சொல் இன்றி வெறுஞ்சொல் குவித்தவர்
நமது மண்ணில் வாழப்புகுந்தார்.
நமது தமிழே அவர்மொழி ஆனது.
தமிழே தந்தது சொல்லின் கூட்டம்.
தமிழே அவர்க்கு எழுத்தும் தந்தது.
நகர் எனும் வினையாகு பெயரே
நாகர் என்றும் நாகரி ஆனது.
நாவல்லவர் வாழ்ந்த தீவு என
நாவலந்தீவு என்றே அழைத்தனர்
நாவில் வல்லநம் நறுந்தமிழ் நாட்டை.
நாவுதல் என்பதும் ஆழ்ந்த தொருசொல்!
நாவின் வேலை அலை போன்ற தாகும்.
நாவில் இருந்தே நாவாய் வந்தது.
நாவாய் ஓட்டி உலகம் ஆண்டவன்
நாகரிகம் தந்தது நற்றமிழ் முதல்வனே.
(தொடரும்)
__________________________________________________________