செவ்வாய், 13 டிசம்பர், 2016

ரோஜா மலரே ராஜகுமாரி... (வர்தா புயல் )

ரோஜா மலரே ராஜகுமாரி...
(வர்தா புயல் )
----------'---------'------------------------------------ருத்ரா இ பரமசிவன்


ஒரு புயல் பூவானது என்று 
நாடா புயலுக்கு 
பூச்செண்டு நீட்டி மகிழ்ந்த வேளையில் 
ஒரு  பூவொன்று புயலானது.
ரோஜா என்ற ராஜகுமாரியே !
ஏன் உன் கையில் இந்த
கனமான கதாயுதம்?
என்ன விந்தை பாருங்கள்..
காஷ்மீரில் பூக்களையெல்லாம்
துப்பாக்கிகள் கொண்டு
முகர்ந்து பார்க்கும் பாக்கிஸ்தான்
வைத்த பூவின் பெயராயிற்றே வர்தா!
அந்த ரோஜாமலர் சென்னையில்
ஒரு "குருட்சேத்திரத்தை"  அல்லவா
பதியம் செய்து
தன் முள்முகம் காட்டிச் சென்றுவிட்டது.
புள்ளிவிவரத்தில் நம் துயரங்களை
"பல ஆயிரக்கணக்கில் "சொல்லி
மீண்டுவர முயல்கின்றோம்.
"அம்மா"வை இழந்த புதல்வர்களே !
கண்ணீர் விட்டு
கும்பிட்டுக்கொண்டிருந்தது போதும் .
அம்மாவின் சீற்றம் உங்களுக்கு
மறந்து போயிருக்கும் அல்லவா!
அதுவே தான் இந்தப்புயல்!
"ஏமாறாதே.ஏமாற்றாதே"
என்பது தான் இதன் உட்குறிப்பு.
உன் பாதையையும் திசையையும்
இழந்து விடாதே என்பதே இங்கு செய்தி!
உன் வாக்குப்பெட்டி வெறும்
பணப்பெட்டிகள் இல்லை.
நாளைய நூற்றாண்டுகளின்
மானுட ஜனநாயகத்தின்
சவப்பெட்டிகளும் இல்லை.
அந்த "மெரீனா"வின் ஒவ்வொரு
மணல் துளியிலும் நம்பிக்கையின்
மனத்துளிகள் கடல்கள் ஆகின்றன.
அதில் உன் வெற்றி அலைகள்
கீதம் பாடட்டும்.
புயல்களை "பூ"வென்று ஊதி விடு.
சென்னை மாநகரம் மீண்டும்
முகம் மலர பாடு படும்
அரசு மற்றும் மக்களின்
எல்லா செயல்மறவர்களுக்கும்
மனம் நிறைந்த பாராட்டுக்கள்!


------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக