ஞாயிறு, 25 டிசம்பர், 2016

வங்காள "வெறி"குடா

வங்காள "வெறி"குடா
==========================================ருத்ரா

உன் உடம்பெல்லாம்
முட்களை பரப்பி வைத்துக்கொண்டு
ரோஜாவாய் வந்தாய்.
மரங்களை பிணங்களாக்கி
வீதியில் எறிந்தாய்.
மின்சாரத்தின் உயிர் பிரிந்தது.
மக்கள் இன்னும்
நடைப்பிணங்கள் தான்.
குடிக்க தண்ணீர் இல்லை.
கால் கழுவவும் தண்ணீர் இல்லை.
ஆயிரக்கணக்கில்
மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன.
நகரம் இப்போது நரகம்.
"போர்க்கால அடிப்படையில்" என்றார்கள்.
சேதங்களின் புள்ளிவிவரங்கள் மட்டுமே
குண்டுச்சத்தங்களாய்
ஊடகங்களில் கேட்கிறது.
நிவாரணம் கேட்கும் அல்லது கொடுக்கும்
பேரம் இன்னும் படியவில்லை.
பத்தாயிரம் இருபதாயிரம் கோடிகள் என்று
கரன்சியில்
இன்னொரு புயல் வீசக்காத்திருக்கிறது.
கேட்பவரும் கொடுப்பவரும்
குறி வைப்பது
"ஓட்டை"மட்டுமே!...நம்
வீட்டை அல்ல!
நாட்டை அல்ல!
"தலைக்கு ரெண்டாயிரம் மூவாயிரம்
கெடைக்குமாம்ல"
இந்த பெரும் ஏக்கங்களின்
அடர்த்தியே
அந்த வங்காள விரிகுடாவில்
மீண்டும் மீண்டும்
"காற்றழுத்த" தாழ்வு மண்டலங்களாய்
தவழ்ந்து கிடக்கிறது.
பூமத்ய ரேகை எனும் அந்த‌
நிலநடுக்கோட்டில்
தொப்பூள்கொடியாய் சுற்றிக்கிடப்பது
நம் "வறுமைக்கோடு"தான்!
வங்காள விரிகுடாவே
உன் வெறிபிடித்த மூச்சுகள்
இந்த வறுமைக்கோட்டை அழிக்க வரவில்லை.
உன்னால் வரும் நிவாரணங்கள்
இந்த வறுமையை இன்னும்
பூதாகரமாய் காட்டி
அரசியல் பூச்சாண்டித்தனங்களை
அரங்கேற்றிக்கொண்டிருக்கின்றன.
மழைக்காற்றே
எங்கள் வளம் கொழிக்க வா!
வளம் அழிக்க வராதே!
மங்கலம் என்று உனக்கு பெயர் சூட்டினால்
மயானம் போல் ஆக்கி அச்சமூட்டுகிறாய்!
வானிலை அறிவிப்பு புகைப்படத்தில்
பேய்க்கூந்தல் விரிப்பாய்
மேகங்கள் "படப்பிடிப்பு" நடத்துகின்றனவே!
இந்த கோடம்பாக்கத்து "பேய்"க் கதைகளை
யார் எழுதினார்கள்
வங்காளவிரிகுடாவில்?
=================================================கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக