வெள்ளி, 23 டிசம்பர், 2016

பெருச்சாளிகளின் கோட்டை

பெருச்சாளிகளின் கோட்டை
=========================================ருத்ரா
செயின்ட ஜார்ஜ் கோட்டை
தன் வெள்ளை அங்கியை கழற்றிய பின்
நம் "மூவர்ண"சுதந்திர ஆடையை
அணிந்து கொண்டபோது
கிழக்கே உதிக்கும் சூரியன்
பெருமை கொண்டது.
வழக்கமான கிழட்டுசிங்கத்தின்
காலனி ஆதிக்கச் சுவையின்
எச்சில்களிலிருந்து
விடுபட்டு விட்டேன் என்று!
விடியல் வெளிச்சம் கசிந்து..அது
சுள்ளென்று சுட்டெரிக்கும்
வெயிலாக
எப்படி இந்த‌
எழுபதாவது ஆண்டு
பரிணாமத்தில்
நம்மை உறிஞ்சிக்குடிக்கிறது?
ஊழல் கருப்புப்பணம்...
வெறிபிடித்த சில மக்களின் பேராசை....
ஆட்சி எந்திரம்
ஜனநாயகத்தையே கசாப்பு செய்யும்
அதி நுட்ப எந்திரமாக‌
மாறிப்போன கொடூரம்...
எல்லாம் இப்போது வெளிச்சத்திற்கு
வந்த பிறகு
நாம்
புரிந்து கொண்டது
இது பெருச்சாளிகளின் கோட்டை என்று!
நம் பாமரத்தனம்...
சமுதாய பிரக்ஞை கொஞ்சம் கூட இல்லாமல்
ஏழைகளுக்கு போகும் இலவசங்களை
"ஏழை" வேடம் போட்டு
ஏப்பம் விடும் நம் பெருமிதம்..
கார்களில் வந்து ரேஷன் அட்டைக்கு
பொருள்கள் வாங்கிச்செல்லும்
சில கண்ராவிக்காட்சிகள்...
அந்தப்போலி கார்டுகளில் இருந்து
ஊழலின் அகர முதல ஆரம்பிக்கும்
ஈனத்தனம்.....
நாம் பன்னீரில் வாய் கொப்புளிக்கக் கூட‌
அரசாங்க கஜானா
அலவன்ஸ் தர வேண்டும் என்று
தெருக்களில் முரண்டு பிடிப்பது..
பணக்காரன் மேலும் மேலும்
பணக்காரனாய்
முகம் துடைக்கும் டிஷ்யூ பேப்பர்கூட‌
அசோகசக்கரம் அச்சடித்த‌
கரன்சியாய் இருக்க வேண்டும்
என்று
அடம் பிடிப்பது...
ஓட்டுப்போடும்
புனிதக்கடமை கூட‌
காசுகளால் கற்பழிக்கப்படுவது...
இது தான் நம் முகமாய்
கந்தலாய்
அந்தக்கோட்டையில் பறக்கிறது.
விறைப்பாய் சல்யூட் வைப்பவை
பாவம்
கஞ்சி போட்டு சலவை செய்யப்பட்ட‌
காக்கிச்சட்டைகள் மட்டுமே!
குடியரசு தினம்
அந்தக்கோட்டையை
ஆண்டு தோறும் வந்து
கழுவிவிட்டுப்போகிறது.
"ஜெய்ஹிந்த்"
என்று அன்றைக்கு மட்டுமே
"டெட்டால்" தெளித்துவிட்டுப்போகிறது.
அப்புறம்...
"ராவ்"கள் வெறும் கிருமிகள் தான்.
அழுக்கு
நம் "ஓட்டுப்பெட்டியில்"
ஊறிப்போய் கிடக்கிறது.

சரித்திரப்பக்கங்களில்
"வெள்ளைக்காரனாய்"வந்த‌
அந்த "வெள்ளை அங்கிக்காரன்"
இன்று
"கந்தலாய்"க்கிடக்கும்
நம்மைப்பார்த்து
நமுட்டுத்தனமாய் சிரிக்கிறான்.
=================================================



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக