புதன், 14 டிசம்பர், 2016

மாவீரன் கிட்டு

மாவீரன் கிட்டு
=====================================ருத்ரா இ பரமசிவன்.

இது விமர்சனம் அல்ல.
கருத்து மட்டுமே.
தலித் இலக்கியம் படைப்பு
என்பது
மக்களின் அடித்தட்டு
"சிலேட்டில் இருந்து அகர முதல"
ஆரம்பித்தாலும்
அது மக்களின் மொத்த‌
உணர்ச்சி நரம்புகளுக்குள்
விதையூன்ற வேண்டும்
வேர் விட வேண்டும்.
ஆனால்
ஏதோ ஒரு விவரிக்க முடியாத‌
காரணத்தால்
அந்த தீ
அடியில் சாம்பல் தட்டிப்போய்
இருக்கிறது.

உயர் தட்டு மக்கள்
ஏன் மரத்துப்போனவர்களாக‌
இருக்கிறார்கள்?
நம்மை விட
உயரத்தில் இருக்கவேண்டியவர்கள்
ஏன் இன்னும் நம் காலடிகளை
கழுவிக்கொண்டிருக்கிறார்கள்
என்ற "ஊசி" உணர்வுகள் இன்றி
ஊசிப்போன தத்துவங்களில்
மலட்டுத்தனமாக சிந்திக்கிறார்கள்? 
இது உண்மையிலேயே
மகா கேவலமான அவலம்.


தலித் என்றால்
வெறும் உணர்ச்சிக்குழம்பு
என்று புரிந்து கொண்ட‌
"கோடம்பாக்க" கார்ப்பரேட்
"கபாலி"மூலம்
அந்த "சூட் கோட்" தீம் மட்டும்
வைத்து
தன் வியாபாரத்தை
கூர் தீட்டிக்கொண்டது.
இந்தப் படமும்
சுடுகாட்டுப் பிரச்னையை
"பிரஷ்" ஆக்கி
ஒரு படம் தீட்டி வைத்திருக்கிறது.
கிட்டு என்ற பெயரில்
இலங்கைப்போர் ஒட்டிக்கொண்டிருக்கலாம்.
மனிதன்
வாழும் உரிமைக்கு
மட்டும் அல்ல‌
சாகும் உரிமைக்கு கூட‌
"சாகத்தான்"வேண்டியிருக்கிறது
ஒரு புரட்சி அல்லது
போராட்டத்தின் மூலம்.
நம் நாட்டு காவல் துப்பாக்கிகள்
மனித உரிமையை காப்பதற்குப்பதில்
இந்த மனித உரிமையை
வேட்டையாடும்
வெறியை மட்டுமே
தன் நீள நாக்கில் "ஜொள்"
விட்டுக்கொண்டிருக்கின்றன.
ஒரு எரிமலையின்
நரம்பு அணுக்களை
துல்லியப்படுத்தும் பணியில்
இந்த சினிமாப்படங்கள் எல்லாம்
கல்லா கட்டும் சமாச்சாரங்களாகவே
இருக்கின்றன.
சாதி கூட‌
நமக்கு இன்னும்
விளையாட்டுப்பொம்மைதான்.
"பொம்மை" படத்தில்
உள்ள பொம்மை போல‌
உள்ளே வெடிகுண்டு இருப்பது போல‌
திகிலை மட்டும் மூட்டம் போடுகிறது.
வேரோடு பிடுங்கி எறியவேண்டிய
சாதி
இன்னும்
நம் விண்ணப்ப படிவங்களில்
வலம் வந்து கொண்டிருக்கிறது.
அது
அவசியம் ஆகிப்போன
கல்வெட்டுகளாக‌
பரிணாமம் பெற்றுவிட்டன.
தீர்வுகளை தரிசிக்க‌
வலுவற்ற சமுதாய அமைப்பு
அதன் மேலேயே உட்கார்ந்து கொண்டு
அவற்றையே பிணங்களாக சுட்டு
அவிர்பாகம் தின்றுகொண்டிருக்கின்றன.
இருப்பினும்
ஒரு சோப்பு நுரையாகவேனும்
பிரச்னையை காற்றிலே மிதக்கவிடும்
இந்த படங்களை
பாராட்டித்தான் ஆகவேண்டும்.

===================================================


2 கருத்துகள்:

  1. //ஒரு சோப்பு நுரையாகவேனும்
    பிரச்னையை காற்றிலே மிதக்கவிடும்
    இந்த படங்களை
    பாராட்டித்தான் ஆகவேண்டும்.//

    பதிலளிநீக்கு