வெள்ளி, 30 டிசம்பர், 2016

"2017" வெறும் நம்பர் அல்ல.





"2017" வெறும் நம்பர் அல்ல.
===================================================ருத்ரா
"எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்"
...................
2015 ஐப் பார்த்து 2016
இப்படி பாடி முடிப்பதற்குள்
2017 வந்து விட்டது
2016 ஐ பார்த்து இப்படிப்பாட!
எத்தனையோ ஓடி விட்டது.
காலுக்குள்ளும் கைக்குள்ளும் புகுந்து.
எத்தனையோ அலைகள்
அலைகளின் மேல்
அலைகளின் கீழ்
அலைகளின் அலைகளாய்
தங்க மணல்
ஏக்கங்களை தடம்பதிக்க‌
நீல வானம் "கொண்டைதிருக்கு" சூடி
நீளமான கூந்தல் எனும்
கால விழுதுகள் ஆடவிட்டு..
கனவுகள் எனும் பஞ்சுமிட்டாய் நட்டுவைத்த‌
காதல் நுரைவனங்கள் தாண்டி
ஏதோ நிறைவடையாத நிலவுகளுக்கு ஏங்கி...
விழி பிதுங்கி விரல் தட்டிய
தட்டெழுத்துக்களில் எல்லாம்
இனம் புரியாத முலாம் பூசி..
நிறம் தெரியாத பூ தெரியாத‌
மெகந்தியை இனிமையான பூரான்களாய்
நளினமாய் ஊர்ந்து செல்லவிட்டு
வெண்ணெய்ச்சிற்பமென வழுக்கும்
கைகளில் நெளியும்
அந்த அற்பத்தீயின் அடிச்சுவையில்
ஆகாசங்களை கருவுற்று..
இன்னும் முடியவில்லை..
அதற்குள் இந்த திரையே கிழிந்து விட்டதா?...
அதோ
ஒரு நள்ளிரவில்
பன்னிரண்டு அடித்து
நாக்கு தொங்கி
வெட வெடக்க காத்திருக்கிறது.
வா..வா..வா
புத்தாண்டே!
அடித்து நொறுக்கி அடித்து நொறுக்கி
அந்த சில்லுகளை அரசியல் ஆக்கி
பொய் எனும் உண்மையை தூக்கிப்பிடித்து
அல்லது
உண்மையாகவே உண்மையிடம் ஏமாந்து போய்
எத்தனை தடவை
தோல்விகளை வெற்றி என்று
ஜிகினாப்பயிர்களை அறுவடை செய்திருக்கிறோம்.
வரும் ஆண்டு
நிச்சயம் அந்த கதவுகளை திறக்கும்.
சுவர் இல்லை..கூரை இல்லை
வீடே இல்லை..வாசலும் இல்லை..
ஆனால் கதவுகள் மட்டும்
அதோ கனத்த பூட்டில்..
2017
அதை உடைத்து சுக்கு நூறாக்கும்
நம் நம்பிக்கைகள்  அதை விட‌
கனத்த சம்மட்டிகள்.
சென்ற ஆண்டு வெறும் குப்பைத்தொட்டி ஆனது.
ம‌ரணங்கள்
மர்மமான சந்துபொந்துகளை
அடர்த்தியான இருட்டில்
அமிழ்த்திவிட்டுப்போயிருக்கிறது.
அரசியல்
ஜனநாயகம்
ஆட்சி எந்திரங்கள் எல்லாம்
ரத்தம் சொட்டும்
கசாப்புக்கடையின்
குப்பைக்கழிவுகளாய்
குவிந்து கிடக்கின்றன.
உண்மையின் தலை கொய்யப்பட்ட‌
முண்டங்கள்....
கால்கள் அறுக்கப்பட்ட‌
மிச்ச சொச்சங்களாய்
வரலாறுகள்.....
நாறும் குடல் பிதுங்கிய பொருளாதாரத்தின்
வங்கிகள் நோட்டுகளின்
ஏடிஎம் எந்திரங்கள்....
நம் தோளிலேயே ஏறி
நம்மை தன் கோரைப்பற்களால்
குதறத்துடிக்கும்
கருப்பு பண பூதங்கள்...
அவை அரசு கொள்கைகளின்
செல்லப்பிள்ளைகளோ
என நம்மை ஏய்க்கின்ற‌
மாய் மாலங்கள்...
ஒரு  தலைமை மரணித்த‌
வெற்றிடத்தை
எப்படி நிரப்பப்போகிறோமோ
என்று
கண்ணீர் விட்டு
மூக்கை சிந்தி
முகம் துடைத்து நிமிர்வதற்கு
முன்னமேயே
அந்த முகங்களே
களவு போன
திகில் படக்காட்சிகள்...
வழக்கம்போல‌
சினிமாக்களின்
மலட்டுத்தனமான‌
நிழல் சாகசங்கள்...
இருப்பினும்
கிழக்கில் உதிக்கும்
இன்றைய சூரியனில்...
அதன் அடிக்கிரணங்களில்..
ஒரு புதிய உலகம்
நிமிர்ந்து நின்று
நம்மை நம்பிக்கையோடு
அழைக்கிறது!

=====================================================ருத்ரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக