செவ்வாய், 27 டிசம்பர், 2016

தமிழ் விடியல்





தமிழ் விடியல்
==========================ருத்ரா இ பரமசிவன்.

என்ன நடக்குது இங்கே?
ஏன் நடக்குது இங்கே?
வலிய தமிழகம்
கண் முளைக்கும் என்று
இலவு காத்த
கிளிகளாய் நாளும்
"ஓட்டு" மரக்கிளையில்
ஒட்டிக்கிடந்தோம்!
தமிழ் எனும் இன்மொழி நம்
இதயச்செப்புள்
இன் கதிர் விரிக்கும்!
உலக மொழியுள்
ஓர் தனி மொழியாய்
உலா வரும் என்று
செம்மொழி காக்க‌
வாக்குகள் நாமும்
வாரி இறைக்க‌
அணிகள் திரண்டோம்
அலைகள் விரித்தோம்!

எல்லாம் இங்கு
கொட்டாங்கச்சிக்குள்
தேங்கிய நீராய்
தளும்பியதையே தினம்
பார்க்கின்றோமே!
தமிழை மறந்த தமிழன்
வெறும் ஈனக்காசுக்கு
தன்னையே விற்றான்.
அறத்தைக்கொன்ற
அடு போர்த்தீயில்
இலங்கைக்குள்
இந்தியாவும்
இந்தியாவுக்குள்
இலங்கையும்
ஒளிந்து நின்று
எய்த அம்புகள்
தமிழ் இனத்தை
வேரொடு சாய்த்தது.
பிணங்களாய் கரிந்து
மண்ணில் மக்கிய‌ அத்
தமிழினம் கண்டு இத்
தமிழினம் ஏதும்
கலங்கிடவில்லை.
கரம் உயர்த்திடும்
வீரம் இன்றி
கரன்சிக்காக தமிழ்க்
கண்ணை விற்று
தேர்தல் என்னும்
சித்திரம் வாங்கினான்.
இருட்டின் புழுக்களாய்
கிடக்கிறான் இன்றும்!



போலி மொழிகள்
கூச்சல் கேட்டு
கூளம் ஆனான்
குறுகிப்போனான்.
குறுந்தொகை என்ன?
கலித்தொகை என்ன?
தமிழ் ஒளி உண்டு
தரணி சுடர்ந்தவன்
சினிமா நிழலின்
சில்லறைப்பூச்சிகள்
ஆகிப் போனான்.

மறத்தமிழன்
மரத்து தான் போனான்.
வடக்கே இருந்து
கனக விசயர்
நான்கு வர்ண
நச்சுக்கொடியை
ஏற்றி வந்து நமை
ஏய்க்கும் தந்திரம்
ஆயிரம் செய்தனர்.

சிந்துத்தமிழே ஒளி
சிந்து தமிழ் ஆகி
இந்து மாக்கடலையும்
கடந்து சென்றது.
உலகம் சுற்றி
ஓங்கிய தமிழே
எங்கும் ஆண்டது.
எதிலும் சுடர்ந்தது.

இந்துத்துவா என்று
இன்றொரு சூழ்ச்சி
புகையாய் படர்ந்து தமிழ்ப்
பகையாய் சூழ்ந்தது.
வேப்பமரத்தையும் தமிழன்
அம்மா என்பான்!
வேனற்காட்டையும் ஒரு
ஆத்தா என்பான்.
பால் அன்ன
பளிங்கு மனத்தவன்
பாழும் தந்திரம்
புரிந்திட வில்லை.
நாலு வேத
நரி ஒலி ஊளையில்
தாய்த்தமிழை
தொலைத்திட நின்றான்!

தமிழை உறிஞ்சும்
அட்டைப்பூச்சியை
ஆராதித்தான்.
அடி பணிந்து வீழ்ந்து
அறிவினை தொலைத்தான்.
அதனால்
இன்னும் இன்றும்
இங்கு அவன்
விழி திறக்கவில்லை...ஒரு
வழி பிறக்கவில்லை.
தமிழ்விடியல்
என்று பூக்கும் ?
அன்று தான்
தமிழ் மண்ணின்
கண்கள் பூக்கும்!

======================================ருத்ரா



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக