வெள்ளி, 23 டிசம்பர், 2016

இன்று தான் கனக்கிறது சிலுவை!இன்று தான் கனக்கிறது சிலுவை!
==============================================ருத்ரா

உலகத்தின் முதுகில் எல்லாம்
காலத்தின் கனத்த சிலுவையாய்
"காலண்டரை"ஏற்றி வைத்து
மானிடத்தின் ஓரிழையில் கோத்த‌
தேவகுமாரனே!
உன் ஜனனம் பனிப்பூக்களின்
மகரந்த தெளிப்புகளில்
அன்பின் வாசம் தனை
எங்கள் எல்லோருக்கும்
முகரக்கொடுத்தது.
மணற்கடிகையின் குறுகிய தொண்டைவழியே
காலம் வழிவது போல்
ஓ!பாலகனே
நேசம் காட்டும் ஒரு பாதைக்கு
ஒரு கணவாயை காட்டிய‌
பிறப்பு அல்லவா உன் பிறப்பு!
போதி மரத்து முனிவன் போதித்த போதும்
ரத்தத்தின் சத்தம்
இந்த மனிதர்களிடையே
இமைகள் உரிக்கவில்லையே
அன்பு விழி பூக்க!
அந்த யோர்தான் ஆற்றுநீரை
ஒரு நாள் உன் கையில்
அள்ளிய போது
அதில் பார்த்திருப்பாயே
அந்த பளிங்கு பிம்பங்களை..
இந்த மனிதனின்
மூளைத்தினவுகளுக்கும்
இதயகனவுகளுக்கும்
காத தூரம் என்று.
நாளை
அண்டத்தையும் கூட‌
லாப விகிதம் ஆக்கி
நாக்கு நீட்டி
சுவைக்கக்காத்திருக்கும்
இவனுக்குள்
"அல்காரிதம்" பதித்தது
அந்த கர்த்தருக்கெல்லாம்
ஒரு கர்த்தராய்த்தானே
இருக்கமுடியும்?
கலங்கவில்லை நீ!
படைப்பை விட படைப்பின் கருவான‌
சமாதானமே உன் மீது படர்ந்து இருந்தது.
விண்ணிலிருந்து எறிந்த அறிவின் துரும்பு
துப்பாக்கியாக‌
அவதாரம் எடுக்கும்போது
பர மண்டலங்களும்
நர மண்டலங்களும் கூட‌
கபாலங்களாய் குவிந்துபோகும் என்று
அதனுள்
ஒரு அன்பின் ஈரப்பசையை
மின்சாரம் பாய்ச்சித்தான் ஆகவேண்டும் என‌
இந்த ஆணிகளையும் முட்கிரீடங்களையும்
நீ தரித்துக்கொண்டாயா?
உன் சீடர்கள் விதம் விதமாய்
விவிலியங்கள் சொன்ன போதும்
உன் இதயத்துடிப்புகள்
அந்த சொற்களில் மானுடத்தை நோக்கிய‌
அன்பின் ஊற்றையே கசிய விட்டன.
மனிதனை மனிதன் மன்னித்து
மலர்ச்சியுறும்
அந்த மண்ணின் அல்லது விண்ணின்
வயிற்று "ஸிப்"கிழித்து
விடியல் தந்த குரல் அல்லவா?
உன்
"குவா..குவா..குவா!"
தாயின் கர்ப்பத்திலேயே
வாளும் ஈட்டியுமாய்
கன்னிக்குடம் உடைக்கும்
யுகத்தையே உடைக்க..
கை நீட்டி கால் உதைத்துப் பிறந்த‌
அன்பின் ஒளியல்லவா நீ!
உன் முகமும் உன் முதுகும்
எங்களுக்கு
முகவரி தந்தன..
கி.மு என்றும் கி.பி என்றும்.
கண்ணுக்கு கண்
பல்லுக்கு பல்
உயிருக்கு உயிர் என்று
பண்டமாற்றம் செய்யும்
ரத்தவெறியின் பொருளாதாரமா
"இறையம்"என்பது?
இல்லை என்று
உயிர் பெய்து உன் அன்புப்
பயிர் வளர்த்தாய்.
இன்னும் இதை
இவர்கள் புரிந்துகொள்ளவில்லை
என்று
"பிதாவே இவர்களை மன்னியும்"
என்றாய்.
இந்த துப்பாக்கி வாய்களின்
வெறித்தீயில்
படுகொலைகள் அரங்கேறும்
பாதக‌ங்கள் மறைந்துதான் போகவேண்டும்.
ஒவ்வொரு தடவையும்
அந்த நம்பிக்கையே பிரசவிக்கிறது.
2015 ஆவது பிரசவம்
நம் உள்ளங்களின் துணி விரிப்பில்!
வலியின்
ரத்தம் சிந்தி பிரசவிப்பதில் ஒரு
ரத்தம் சிந்தா உலகம் ஒன்று
அதோ
தன் பிஞ்சுக்கைகளை நீட்டுகிறது.
அதன் விரல் ஸ்பரிஸத்தில்
கடவுளர்கள் எல்லாம்
சார்ஜ் ஏற்றிக்கொள்ளட்டும்.
"மானுடநேயத்தின்"
புத்தொளி பிறக்கட்டும்.
புத்தொலி கேட்கட்டும்.
நன்மைகளை மட்டுமே பிறப்பிக்கத்தெரியாத‌
பிதாவே
தீமைகளை மட்டும் மனிதன் படைத்தான்
என்று
தினம் தினம்
மாதா கோயில் மணியோசைகளை
ஒலிக்கின்றீர்களே!
இதன் உள் ஒலி உங்களுக்குக்கேட்கவில்லையோ?
பிதாவே
இவர்களை மன்னிப்பது இருக்கட்டும்
உங்களை நீங்களே மன்னித்துக்கொள்ளுங்கள்.
அப்போது தானே
உங்களால் நன்மைகளை மட்டுமே படைக்க முடியும்.
அன்று கனக்கவில்லை சிலுவை!
இன்று தான் கனக்கிறது.
====================================================================
28 டிசம்பர் 2014 ல் எழுதியது.
பிழை திருத்தம் அல்ல.
கவிதையில் ஆண்டு எண்ணை 2015 லிருந்து 2017க்கு திருகிக்கொள்ள வேண்டுகிறேன்.(கடிகாரத்தில் முள்ளை திருக்கிக்கொள்ளுவது போல)

===================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக