சனி, 17 டிசம்பர், 2016

மாதங்களில் நான் மார்கழி!


மாதங்களில் நான் மார்கழி!
=======================================ருத்ரா இ.பரமசிவன்.

மாதங்களில் நான் மார்கழி.
ஏனெனில்
அந்த நாற்றமெடுத்த‌
பாம்புப்படுக்கையை விட‌
சூரியனின் இந்த‌
ஏழுவர்ண பளிங்கு விந்து எனும்
பனித்துளிக்குள்
படுக்கை விரித்துக்கொண்டே
படைப்புக்கு ரிமோட் தட்டுவேன்
என் தொப்பூள் கொடியில்.
வடிவ கணிதம் எனும்
ஜியாமெட்ரியில்
குறுக்குக்கோடும்
நெடுக்குக்கோடுமே
இறைவர்கள்.
வாழ்க்கையின் வடிவ கணிதமும்
"நின்றவண்ணமும்"
"கிடந்த வண்ணமுமாகவே"
நிகழ்வுகளை நகர்த்துகின்றன.
படுக்க இடம் கிடைக்காமல்
சிவனின் திருநீற்றுக்கோட்டில் கூட‌
நான் கிடந்திருக்கிறேன்.
அவன் சூலத்திலும்
நின்று விறைத்திருக்கிறேன்.
இந்த‌
ரெண்டும் ரெண்டும் நாலு
என்ற உண்மையைக்கூட‌
வேதத்துள்
நீங்கள் பதுக்கிக்கொள்ள வேண்டுமா?
"அஸ்தி நாஸ்தி நாஅஸ்தியஸ்தி..."
ஒன்றுமே இல்லை 
ஒன்றுமே இல்லை என்று
எத்தனை ஸ்லோகங்களை
"மறைவாய்" அதாவது
நான்கு மறையாய்
சுருட்டி வைத்திருக்கிறீர்கள்!

மார்கழியின்
மரகதப் புல்நுனியில்
ஊரும் சிறு பூச்சி
அதையும் விட சிறு பூச்சியை
தீனியாக்க விரைகிறது.
இயற்கையில்
ஒரு மரணத்தின் வாயில்
இன்னொரு மரணம் அமர்ந்திருக்கிறது
ஜனனமாக.!
"பசி" தான் அங்கே
வாசலும் புழக்கடையும்!
இந்த "சொர்க்க வாசலை"
நீள நீளமாய்க் கட்டியிருந்த‌
மூங்கில் வேலிக்குள் முடங்கி
மரவட்டையாய்
நகர்ந்து தரிசிப்பவர்களே!
உங்கள்
மூளைக்கபாலம்
த‌ன்
நுண்ணிய நியூரோன் முடிச்சுகளின்
அந்த‌
"பர்கிஞ்சே செல்களின்"
வாசல்களை திறக்கச்செய்யுங்கள்.
நீங்கள் தரிசித்ததை
எனக்கும் சொல்லுங்கள்.
எனவே
மார்கழி என் பள்ளிக்கூடம்.
பாடம் நடத்துங்கள்.
என் ஞானக்குளியல்
உங்கள் கேள்விகளிடம் தான்.

===================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக