ஞாயிறு, 18 டிசம்பர், 2016

ஜெயலலிதா என்றொரு அம்மா!

ஜெயலலிதா என்றொரு அம்மா!
=====================================ருத்ரா

"நீ என்பதென்ன?
நான் என்பதென்ன?"
.....................
முதல் முதல்
"வெண்ணிற ஆடையில்"வந்த அவர்
அப்புறம்
வாழ்க்கையின் வண்ண ஆடைகளில்
வலம் வந்தாரா என்பது
ஒரு கேள்விக்குறி தான்!
அந்தப்பாடலில்
கேள்விகளால்
வேள்வியைத்துவக்கியவர்
அந்த சினிமா வாழ்க்கையில்
ஜிகினா மட்டுமே உண்டு
என்று
அவர் தெளிந்து கொண்டபோது
கீழே இறங்கமுடியாத‌
ஒரு சிகரத்துக்கு போய்விட்டார்.
ஒரு அங்குலம் தவறினால் படுகுழி
ஒரு அங்குலம் உயர்ந்தால்
இன்னும் ஒரு புதிய சிகரம்
என்ற பாதை
அவர் காலடிகளில் நெளிந்து ஓடியது.
அது அவர்
வாழ்க்கையா?
சினிமாவா?
அரசியலா?
நமது பார்வையில்
அந்த பரமபத ஆட்டத்தில்
ஏணி மட்டுமே இருந்தது.
அவருக்கு மட்டுமே தெரியும்
அந்த ஏணி
ஏதோ ஒரு "அனக்கோண்டா"பாம்பினால்
செய்யப்பட்டது என்று.
ஆட்சி நாற்காலி மட்டுமே
ஏழு கடல் தாண்டி ஏழு மலை தாண்டி
அவர் பத்திரமாய் இருந்த இடம்.
அவரால்
கோடீஸ்வரர்களுக்கு மேலும்  மேலும்
குவாரிகளும்
ஆறுகளும் மலைகளும் காடுகளும்
கிரானைட் பாளங்களும்
பட்டாவான போது தான்
சில ஏழைகளுக்கு
மலிவு விலை இட்லியும் பொங்கலும்
கிடைத்தது.
இலவசங்களின் வெள்ளம்
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையிலும்
கிடைத்தது தான்
அவர் அம்மா ஆன காவியம்.
ஓட்டுகளை
அழுக்குப்பேப்பர் கடைக்காரன்போல்
கரன்சிகளால்
தராசு தட்டுகளில்
லாவிக்கொள்ளும் லாவகம்
தமிழ்நாட்டு ஜனநாயக பாரம்பரியம்
ஆன போது தான்
அவர் உயரம் எல்லாருக்கும்
மிரட்சியைத் தந்தது.
அதைவிட‌
மிரட்சியையும் துயரத்தையும் சோகத்தையும்
மிக மிக அதிகமாக‌
அவரை விமரிசிப்பவர்களுக்கு
கொடுத்தது
அவர் மரணமே!
அவர் இழப்பு
வெற்றிடம் அது இது என்றெல்லாம்
சொல்லி வாய் மூடும் முன்
"ரோஜாமலர் புயலாய்"
அந்த வெற்றிடம் நோக்கி
அதிகாரப்புயலின்
காற்றழுத்த மையம்
இன்னொரு அம்மாவாய் ....
அம்மம்ம!..என்ன வேகம்!
வாழ்க அம்மாக்கள்!

கிராம மக்களுக்கு
அவர் "தங்கத் தாரகை"தான்.
அதனால் தான்
"பொன்"மனச்செம்மல் அருகே
அவருக்கு இடம்!
அந்த இடத்து மெரீனாவின்
"மணல் கூட
சில நாளில் என்ன‌
இப்போதே பொன் ஆகியிருக்கலாம்"
கவிஞர் கண்ணதாசன் போட வேண்டிய‌
பிழை திருத்தம் இது.

==============================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக