செவ்வாய், 27 டிசம்பர், 2016

ஏ.ஆர்.ரகுமானுக்கு உலகத்தமிழன் விருது!

ஏ.ஆர்.ரகுமானுக்கு உலகத்தமிழன் விருது!
===============================================ருத்ரா இ பரமசிவன்.

இதை கேட்கும்போது
ஏ.ஆர்.ரகுமான் இசையையும் விட‌
இனிமையாக இருக்கிறது!
இசையமைப்பு என்பது
பிரம்மவித்தை என்பதை
அடித்து நொறுக்கிய‌
இளம்புயல் ஏ.ஆர்.ரகுமான்.
ரோஜா படத்தில்
அந்த‌
"சின்ன சின்ன ஆசை......"
வரிகளை
செவிகளுக்குள்
கவிதையாக்கினார்.
ஓசை எனும்
செதுக்கிப்போட்ட‌
சத்தங்களின் சில்லுகளையெல்லாம்
இனிமை பெய்யும்
மழையாக்கினார்.
இவர் கணினியின் வழியே
கழுதைக்குரல்கள் கூட‌
இசையின் அற்புத‌
விசைப்பலகை ஆனது.
அந்த கீ போர்டில்
உலகத்தின் இதயத்துடிப்புகளைக்கூட‌
ஒன்றாக்கும்
சமாதான சங்கீதம் ஆனது.
இந்தியில் பாடினாலும்
அவர் தமிழே நன்றாய் ஒலித்தது.
அந்த "வந்தேமதரத்தை"
தாய் மணணே
இதழ் திறந்து பாடியதாய்
காட்டினார்.
அந்த சிறிய பாட்டுக்கு
அமைத்த இசைக்கு
ஏழு கடல்களும்
தங்கள் அலைகளை அமைதியாய்
அவர் முன் சமர்ப்பிக்கும்.
தமிழ் எனும் செம்மொழிப்பாட்டுக்கு
அவர் இசை
இந்தியாவின் எல்லா மொழி
நரம்புகளையும் மீட்டி
யாழ் வாசித்தது.
எத்தனை படங்கள்?
எத்தனை பாட்டுக்கள்?
மொழி தாண்டி
கடல் தாண்டி
விண்ணையும் முட்டி
அந்த இனிமை பரவுகிறது.
அந்த இசைப்பூக்கள்
சிதறும் மகரந்தங்களில்
நம் பத்துப்பாட்டும்  எட்டுத்தொகையும்
பண் கூட்டும் கார்வைகள்
ஒலிப்பதை உணர்கிறேன்.
இந்த விருது
"யாதும் ஊரே யாவரும் கேளிர் "
என்று பாடிய
கணியன் பூங்குன்றன்
கழுத்தில் விழுந்த மாலையாய்த் தான்
கண்ணுக்கு தெரிகின்றது.
அவரின் எல்லா பாட்டுகளும்
அருமை! அருமை! அருமை தான்!
பட்டியலிட
என் விரலுக்கு வலிமையில்லை!
இருந்தாலும்
"காதலன் "படத்தில்
அந்த "முக்காபுலா"பாட்டு!
கிராஃபிக்ஸோடு
முகம் இல்லாத அந்த தொப்பியும்
கால்கள் இல்லாத அந்த ஷூக்களும்
தாளங்களோடு
இசை கூட்டியிருப்பதை
கேட்ட என் இனிய சிலிர்ப்புகள்
இன்னும் அடங்கவில்லை!

=================================================



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக