வெள்ளி, 16 டிசம்பர், 2016

பயணம் தொடருங்கள்


பயணம் தொடருங்கள்
================================ருத்ரா இ.பரமசிவன்

மானுட வாசம் வீசும்
மாணிக்கப்பூங்காவில்
நடைபோடும் சக பயணிகளே!
உங்கள் சுவாசத்துக்கு
போதிய உயிர்வளி இற்றுபோகும்
இறுக்கம் ஒன்று
மெல்லிய வலையாய்
படர்ந்திருப்பதை உணர்கிறீர்களா?
ஏன் இந்த வலை?
"அடுத்த வீட்டுக்காரனையும்
உன் போல் நினைத்து அன்பு கொள்"
"என்பில தனை வெயில் போலக் காயுமே
அன்பில தனை அறம்"
இவையெல்லாம்
எவர் நெஞ்சையும் அறிவையும்
தொடாத தால்
ஏற்பட்ட இறுக்கமே அது.
சில புயல்களும் வெள்ளங்களும்
பாடம் புகட்டிச்சென்றாலும்
இந்த பாடம் மனிதர்களுக்கு
அடிக்கடி மறந்து போகிறது.
சிலர் தேசிய பொருளாதாரங்களையே
தங்கள் சட்டைப்பாகெட்டில்
கார் சாவியைப்போல்
வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இருப்பவன் இல்லாதவன்
இடையே உள்ள வெளி
விரிந்து கொண்டே போகிறது.
காகிதப்பணங்கள்
அந்த வெளியில் கிடக்கும்
சவமாய்ப் போன சமுதாயத்தை
சல்லாத்துணி கொண்டு மறைப்பது போல்
போர்த்திக்கொண்டிருக்கிறது.
செங்கோல் ஏந்தியவர்களின்
லட்சியம்
எல்லோரும் நலமாக வளமாக‌
வாழவேண்டும் என்பதே.
அதற்கு
அன்பாயும்
அதிரடியாயும்
கொண்டுவரும் செயல்வடிவங்கள்
அத்தனையும்
நமத்துப்போவது ஏன்?
அவர்கள் ஏந்தியிருக்கும்
செங்கோலை உற்றுப்பாருங்கள்!
மனிதன் மனிதனை
வேட்டையாடும்
கற்கால தொடைஎலும்பு ஆயுதமே
அந்த செங்கோல்.
சாதி மதம் இனம் மொழி பற்றிய‌
கவர்ச்சிகளின்
பாகுபட்ட வர்ணங்களைக்கொண்டு
பூசப்பட்டதே அந்த ஆயுதம்.
லாப வெறி எனும்
மாஞ்சா தடவிய
"பொருளாதாரககோட்பாடு"
"நூல்கள்"கொண்டு
தடவிய பட்டங்களே அவை.
நம் வாழ்வு ஆதாரங்களின்
கழுத்தையே அறுக்கும் போட்டியில்
அவை உயர உயர பறக்கின்றன!
அரசு எந்திரங்கள்
விரித்து வைத்திருக்கும்
ரத்னக்கம்பளத்தில்
அவை கம்பீரமாக நடை போடுகின்றன.
சக பயணிகளாய்
நடந்து வரும்
நண்பனே! நண்பனே!நண்பனே!
ஒரு டம்ளர் குடிதண்ணீருக்கு
கட்டு கட்டாய் கரன்சி கொடுத்தாலும்
கிடைக்காத அவலம்...
ஒரு பிடி கவளம் உணவு பெற‌
கிலோக்கணக்கில்
தங்கம் கொடுத்தாலும்
கிடைக்காத கொடும் பஞ்சம்...
ஏன் மூச்சுக்காற்று கூட‌
மாசடைந்து
ஆகாசமே
அந்த லாபவெறியின்
நச்சு தனில்
சல்லடையாய் கிழிந்து தொங்கும்
பயங்கரம்...
எல்லாம் நிகழலாம்!
பழம்புராண நினைப்புகளை எல்லாம்
அடித்து நொறுக்கு!
உன் சித்தாந்தங்களை கூர் தீட்டு!
அறிவியல் ஒளியை
கை விளக்காய் ஏந்தி
பயணம் செய்!
அதோ அந்த பூங்காலைக்
கதிர்ப்பூச்சு
உன் உள்ளங்களில்
வெள்ளமென பாயட்டும்.
இனி நடப்பவை எல்லாம்
நல்லவையே!
பயணம் தொடருங்கள்!

================================================================








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக