அவன் கண்டுகொண்டான்....
====================================ருத்ரா இ.பரமசிவன்
அவன் கண்டுகொண்டான்...
விலை மதிப்பற்ற பொருள்
அதோ வானத்தின் உச்சியில்
இருக்கிறது.
ஒரு மின்னல் வெட்டியபோது
அவனுக்குள் காமிரா ஃப்ளாஷ் அடித்தது!
ஆஹா!
கிம்பர்லிகள் ஆயிரக்கணக்காய்
மேலே சுரங்கம் வைத்துக்கொண்டு
வைர மழையை அவன் மீது
சாரலாய் தெறித்தது போல்
அடர்மழையை கொட்டிக்கவிழ்க்க
காத்திருந்தது போல்..
அவனுக்குள் பரவசம்
ரத்த நாளங்களை நிரப்பியது.
ஒளியின் ஊற்றுக்கண்
என்னென்னவோ அவனுக்கு
எழுதிக்காட்டி விட்டது.
அந்த பிரம்மாண்ட பவள உதடுகள்
பிரபஞ்ச பாளங்களாய்
கோடி பிரகாசங்களின் விழிப்பூக்களை
திறந்து திறந்து
எழுதி
அந்த வரிகளை அந்த மாணிக்கப்பலகையில்
பதித்து
கொடுத்து விட்டது.
அது அவன் கட்டளைகள்...
அந்த வரிகளில்
ஒரு பிஞ்சுக் "குவா குவா "க்களின்
ஒலிக்கீற்றுகள்
இசிஜி நெளிவுகள் போல்
ஓடிக்கொண்டிருந்தது.
அவன் புரிந்து கொண்டான்.
சீ..நான் இன்னும் அந்த அற்பப்புழு தானா?
"தனக்குவமை"இல்லாதவன்
ஒலிப்புகளை
இன்னும் வைரம் என்றும் மாணிக்கம் என்றும்
உவமித்துக்கொண்டு.....
என்ன ஈனப்பிறவி நான்!
அந்த உணர்வு அவனயே பிடுங்கித்தின்றது!
அவனையே
கழுமரத்தில் ஏற்றிக்கொண்டது போல்
தன் ஆசையின் குடல்கள் பிதுங்க
தன் வார்த்தைகளின் உடம்பு கிழிய
ரத்தக்குவியலாய்
கீழே வழிந்தான்.
மீண்டும் உடல் தரித்து
அந்த ஒளிப்பிழம்பை மட்டும்
தனக்குள் ஊற்றிக்கொண்டான்.
ஆண்டவன் கட்டளைகள் அங்கே
அவனுள்
சக உயிர் நேசமாய்
அமைதிக்கடலாய்
அன்பின் தெளிவாய் இறங்கியது
சாரம் அவனுள் கரைந்த பின்
அவன் கைகளில்
அந்த கட்டளைப்பலகைகள்
வெறும் சவங்களாய் கனத்தது.
கீழே அடிவாரத்துக்கு வந்து விட்டான்.
மக்களை மகிழ்ச்சிக்கடலில்
மூழ்கடிக்கப்போகிறோம்..
இந்த துயரக்கடலையெல்லாம்
பிளந்து கொண்டு
ஒரு புதிய உலகம் நோக்கி
மக்கள் இனி பயணிப்பார்கள்
என்றெல்லம்
வந்தவன் விக்கித்து நின்றான்.
அவன் கண்ட காட்சி!
அவனை துண்டு துண்டாய்
வெட்டிப்போட்டு விட்டு விட்டது.
மக்கள் இங்கும் அங்கும் ஓடினார்கள்.
தகத்தகவென
பனைமர உயரத்துக்கு
தங்கச்சிலைகளுடன்
ஊர்வலம் நடத்தினார்கள்.
உற்சாகம் கொண்டார்கள்.
கேட்டால் "ஹிரண்ய கர்ப்பன்" என்றார்கள்.
ஒன்று
தங்கத்தில் "முரட்டுக்காளை"
இன்னொன்று
பொன்னில் வடித்த "பெரிய கரடி"
கரடியும் காளையும் அங்கே
கடவுள் ஆனார்கள்.
அவற்றின் அன்றாட
முட்டு மோதல்கள்
வால் ஸ்ட்றீட்டின்
மின்னல் நரம்புகளாய்
க்ராஃபிக்ஸ் காட்டிக்கொண்டிருந்தன.
ஞானத்தை இங்கு எல்லோருக்கும்
பங்கு போட்டு கொடுக்க அனுப்பிய
அந்த "பங்குத்தந்தையின்" வார்த்தைகள்
இந்த "பங்குச்சந்தையில்"
கற்பழிக்கப்பட்டு விட்டன!
வங்கிகள் ஏடிஎம் மெஷின்கள் முன்
மானுடம் முழுதும்
கசாப்பு செய்யப்பட்டுக்கிடந்தன.
வெறிகளின்
கங்காஜலத்தில்
புண்ணியாவசனம் தெளிக்கப்பட்டு
சாக்கடை நாற்றம் தாங்க முடியவில்லை!
பணம் அடையாளம் இழந்து
பிணக்காடுகள் ஆகிக்கிடந்தன.
அரசியல் எனும் பெரிய ஆண்டவனின்
கால்களில்
அதன் மிதிகளில்
வானத்துப்பெரிய இறைவன்
கூழாகிக்கிடந்தான்.
"கட்டளைப்பலகைகள்"
நொறுங்கிக்கிடந்தன.
=======================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக