வியாழன், 29 டிசம்பர், 2016

மோடிஜியின்  கெடு

மோடிஜியின்  கெடு
=====================================ருத்ரா இ பரமசிவன்.

நம் சுதந்திரக்கொடி
மூவர்ணத்தில் பறந்தாலும்
அது "கருப்புவர்ணத்திலேயே "
நம் பொருளாதாரத்தை படம்பிடித்து
காட்டிக்கொண்டிருப்பது
நம் தொண்டையில் சிக்கிய
மீன் முள்ளாய் உறுத்தியது
பொறுக்கமுடியாமல்
அந்த காகித (பண) அரக்கனோடு
நீங்கள் மல்லுக்கு நின்றது
உங்கள் லட்சிய வேகத்தையே காட்டுகிறது.
அதற்கு
எங்கள் பாராட்டுக்கள் !வாழ்த்துக்கள்.!
வைக்கோல் படைப்பில் விழுந்து கிடக்கும்
அந்த வைர ஊசியை எடுக்கவேண்டும் ..
அதற்கு சட்டெ ன்று
வைக்கோல் படப்பை கொளுத்திவிடுவோம்
என்று நீங்கள் எடுத்த முடிவில் தான்
இந்த தேசமே இப்போது
பற்றியெரிந்து கொண்டிருக்கிறது..
அந்த பணங்களை செல்லாது என்று
அறிவித்த பிறகு
இவை கழுதை தின்னும் காகிதம்
ஆகி விட்ட து !
கழுதை கூட தயங்குகிறது
அந்த அசோக சக்கரத்தையும்
காந்திப்புன்னகையையும்
எச்சில் படுத்த !
கழுதையையும் விட கேடு கெட்டவர்கள்
கறுப்பு பழைய பணத்தையும் கூட
சலவைப்புது நோட்டுகளாய்
பெட்டி பெட்டி களாய் மாற்றிக்கொண்டார்களே
அந்த லஞ்ச ஊழல் ஓட்டைகளை
அடைக்காமல்
ஓட்டை வாளி கொண்டு
இந்த பண சமுத்திரத்தை
இறைத்து என்ன பயன்?
அப்பாவி மக்கள்
ஒற்றை இரண்டாயிரம் மற்றும் ஐநூறு ரூபாய்
தாள்களுக்கு
தெருக்களில் தவம் கிடக்கிறார்கள்.
பாவத்தின் சம்பளம் மரணம் என்பது போல்
நீங்கள் செய்த பாவத்தால்
இவர்களின் சம்பளம் கூட
கைக்கு வராமல் மனம் ஒடிந்து
மரணத்தை சந்திக்கிறார்களே ?
இவர்களை இப்படி தண்டிப்பது
என்ன நியாயம்?
உங்கள் கெடுவின் கடைசி மைல்கல்
இப்படிப்பட்ட கல்லறைகளையா சந்திப்பது.?
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல்
உங்கள் "ரொக்கம் இல்லா பொருளாதாரம்"என்பதை
மொழிபெயர்த்தால்
"போகாத ஊருக்கு வழி" என்றே பொருள்.
இந்த திட்டம் தோல்வி என்றெல்லாம் சொல்லி
உங்கள் தன்மானத்தை இழக்கவேண்டாம்.
எல்லோருடனும் அமர்ந்து பேசி
திட்டத்தை சீர்திருத்தம் செய்யலாம்.
எல்லோருக்கும்
பாங்கில் அவர்கள் விரும்பும் தொகை கிடைக்கும்
என்ற நம்பிக்கையை ஊட்டுங்கள்.
மக்களிடம் "பொருளாதார மேதை ஜெ.எம்.கீன்ஸ் "
கோட்பாட்டின் படி
"ரொக்கம் வேண்டுமா வேண்டாமா என்று அல்லாடும்
ஒரு உட்கிடக்கையில் "
("லிகுடிட் டி  ப்ரஃபிரன்ஸ்  மோட்டிவ்")
வீண் பயத்தை (பேனிக் )  விதைக்கலாமா?
நன்கு சிந்தியுங்கள்
எங்கள் அன்பான பிரதமர் அவர்களே !
உங்கள் திட்டத்துக்கு நாங்கள்
தோளோடு தோள் கொடுத்து தான்
நின்று கொண்டிருக்கிறோம்.....
ஆனால் கால் கடுக்க   "க்யூவில்".
அதுவும் ஒரு தேர்தல் "கியூ" போல.
கியூவில் ஒருவர் அப்பாவித்தனமாய் கேட்கிறார்.
"ஏ டி எம்"னா என்னங்க?
அடுத்தவர் கடுப்போடு சொல்கிறார்
"அடுத்த தேர்தல்ல மொட்டை "தான் என்று.
நீங்களும் வானொலியில் பேசுகிறீர்கள்.
"மன் கி பாத்" என்று.
ஆனால் உங்கள் மனத்தை கழற்றி
எங்கோ வைத்து விட்டு பேசுகிறீர்களோ
( மன் கே பினா ) என்று ஐயம் கொள்கிறோம்.
உலகமே வியக்கும் இந்த திட்டம் கண்டு
நாங்களும் வியக்கிறோம்.
புதிய நோட்டுகள் .
சட்டியில் வெந்த வுடனேயே
சுடச் சுட சில வீடுகளுக்கு
கோடி  கோடி களாய்
போய்ச்சேருவதை க்கண்டும்
வியக்கிறோம் வேதனையில் நைந்து.
எப்படியோ போகட்டும்.
மனம் விட்டு பேசுவோம் என்று
லோக சபா வாருங்கள்.
சிக்கல்கள் தீரும் என்று நம்புவோமாக!
"ஜெய்ஹிந்த் "

==============================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக