வியாழன், 15 டிசம்பர், 2016

நிழல்

நிழல்
=================================ருத்ரா இ பரமசிவன்.

இவரை அவரின் நிழல்
என்கிறார்கள்.
ஆனால் அவரே இவரின் நிழல்
என்று
தெரிந்து போய் விட்டதே.
இந்த நாற்காலிகள் எல்லாம்
ஒன்று சேர்ந்து
அந்த உயரமான இடத்தில்
அவரை உட்கார்த்த துடிப்பதில்
உண்மை வெளியாயிற்று
அந்த சந்தனப்பெட்டியில்
அடங்கிப்போனது நிழல் தான் என்று.
கோடிக்கணக்காய்
தொண்டர்களின் கண்ணீர்ப்பிம்பம்
இன்னும்
அவரைக்காட்டும்போது
கண்ணாடியில் ரசம் பூசிய‌
பின் பக்கமா
உண்மை முகம் காட்டும்?
கண்ணீர் ஜனநாயகம்
எப்படி இருந்தாலும்
கரன்சி ஜனநாயக‌மே
இன்னும் இங்கு செங்கோல் உயர்த்தும்
கலாச்சாரம்
இந்த மண்ணில் வேர்பிடித்திருக்கிறது!
கருப்புப்பண இமயத்தைப்
பிடுங்குகிறேன் என்று சொல்லிக்கொண்டு
மலையைக்கெல்லி  எலியைப்பிடித்த
ஒரு அரசியல் ஸ்டண்டுக்கு வர்ணம் பூசி
ஏழை மற்றும் நடுத்தரவர்க்கங்களின்
அன்றாடக்கனவுகளான‌
ரூபாய் நோட்டுகளை
கண்ணுக்குத்தெரியாத சவப்பெட்டிகளில்
அடக்கம் செய்து விட்டார்கள்.
தெருவில் நரம்பு வெடித்து
நின்று கொண்டிருப்பவர்கள்
என்ன அம்பானிகளும் டாட்டா பிர்லாக்களுமா?
தேயிலைத்தோட்டத் தொழிலாளர்களும்
தங்கள் வேர்வைக்கு கூலி கிடைக்காமல்
தங்கள் வேர்வையைத்தான் கூழ் காய்ச்சி
குடிக்க வேண்டும் போலிருக்கிற‌து!
அரசியல் நுட்பங்கள் தெரியாத‌
"ஓட்டு"பூச்சிகளை
வறுத்துத்தின்னும் இந்த‌
போலி ஜனநாயகமே
ஆட்சி எந்திரத்தின்
கடை ஆணிகள்..திருகு ஆணிகள்!
ராமன் ஆண்டால் என்ன?
ராவணன் ஆண்டால் என்ன?
இங்கு
நிஜம் என்ன? நிழல் என்ன?
சாக்ரடீஸும் ப்ளாட்டோவும்
யாருக்கு வேண்டும்?
பேசாமல்
ஒரு பட்டாணி சுண்டல் பொட்டலம்
வாங்கிக்கொண்டு
மெரீனா போகலாம் வாருங்கள்.

=================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக