நிரைவளை ஊருந்தோள்
_________________________________________________
சொற்கீரன்
வங்கம் வரி உழுத வங்கூழ் திரங்கும்
பாம்புரியன்ன வங்கு வற்று பௌவத்துக்
கிழிந்த கலிங்கம் இடைநெகிழ உடுத்தாங்கு
கடல் பாவு செலவின் கடம்படுத்தான் கண்ணழி
துயில் இன்றி வெண்குருகின் சிறைக்குழீஇ
கரையடுத்து ஊர்ந்தான் மன் சங்குவளை
ஒலித்தாள் உய்த்து உய்த்து அழிந்தான் கொல்.
முன்னீர்ப்பறந்தலை மூள் வெய்யப்பாலையென
முளிதரு நீடுவெள் அலையெறிய எதிர்தந்தான்.
அவள் நிரைவளை ஊருந்தோள் துயர்மலி
நகையொடு கலித்தாள் முள்ளின் முறுவல் வாங்கி.
கண்ணில் கனல்படர் கங்குகள் தெறிப்பக் கலாஅய்
மாட ஒள் எரி ஒளித்து ஒளித்து விழிக்கும் ஆறு
கடல்கண்டன்ன வதை தரு மதியம் ஆங்கு
எழுதரூஉம் கோலம் தரு கொடுந்தொழில்
கொலையின் அஞ்சி பேழ்வாய்ப் பெருந்திரைச்
செருவின் வென்றி முனைந்தான் முனை முறியா
திறத்தோடு நின்றான் நிமிர்ந்தான் கறங்கு வெள்
கடலொடு மள்ளல் முன்னியவன்.
___________________________________________________________
அகநானூறு பாடல் 255 ல் மருதன் இளநாகனார் "நிரைவளை ஊருந்தோள்" என்று தலைவி வரிசையாய் அடுக்கி அணிந்திருந்த வளையல்கள் எல்லாம் அவள் தோள் நெகிழ மெலிந்ததால் அவை ஊர்ந்து வந்து இறங்கின"என்ற பொருள் பட எழுதியிருக்கிறார்.காதலியின் பிரிவுத்துயரத்தை "ஊர்ந்து இறங்கி நெகிழும்"அந்த வளைகளில் படம்பிடித்துக்காட்டும் அந்த வரிகள் எண்ணி எண்ணி வியக்கும் வண்ணம் இருந்ததால்
அதையே தலைப்பாக்கி என் சங்கநடைச்செய்யுட்கவிதையை இங்கு எழுதியிருக்கிறேன்.
சொற்கீரன்
_____________________________________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக