"விட்னெஸ்"
______________________________________
ருத்ரா
ரத்தம் சொட்ட சொட்ட
ஒரு இருதயத்தை அறுத்து
அந்த "வெள்ளிதிரை"யில்
வைத்திருக்கிறது.
அரசியல் சட்டங்கள்
துடி துடிக்க வேண்டும்.
மக்கள் மன்றங்கள்
மண்டியிட்டுக் கதற வேண்டும்.
பாக்ஸ் ஆஃபீஸ் வசூல்களின்
புள்ளி விவரங்களில்
புளகாங்கிதம்
அடைந்துகொண்ண்டிருக்கும்
சூப்பர்ஸ்டார்களின் மனசாட்சி
கொஞ்சமாவது சூடேறவேண்டும்.
மக்கள்?
மக்களா?
அவர்கள் மரத்துப்போய்
கோவில்களில் அர்ச்சனை சீட்டுகளுக்கும்
கும்பாபிஷேகக்கூட்டங்களுக்கு
முண்டியடித்துக்கொள்ளும்
கியூ வரிசைகளுக்கும்
தவம் இருந்து
"சவ"யோகம் இருப்பதற்குமே
பொழுதுகள் போதவில்லை.
இளைய தலைமுறையோ
சினிமா எனும் கச்சாஃபிலின்
டாஸ்மாக்கில் உழன்று கொண்டிருக்கின்றது.
இல்லாவிட்டால்
செல்ஃபோனின் பொந்துகளுக்குள்
அடைந்து கிடக்கும் ஈசல்களாக
மொய்த்துக்கிடக்கின்றது.
சமூக நீதியின் சமத்துவம்
அழிந்து போய்
ஒரு சாக்கடையின் சங்கமத்தில்
மனித தத்துவம்
பிணங்களாகி
ஈ மொய்த்துக்கிடக்கும்
காட்சிகள் பற்றி
கவலைப்படுவது
அந்த ஈக்கள் மட்டுமே.
______________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக