தினம் தினம்
அந்த ஈடன் தோட்டத்து மரம்
கிளையை அசைக்கிறது.
இலைகளுக்குள்
செங்கனி சூரியனைக்காட்டுகிறது.
கற்பனையாய்
கூடவே பாம்பும் நெளிகிறது.
வெட்ட வெளியாய் தெரிந்த வானம்
முதன் முதலாய்
மேகங்களை உடுத்திக்கொள்கிறது.
ஏதோ ஒரு ஈர்ப்பு
அன்றே
நியூட்டனையும் ஐன்ஸ்டீனையும்
தூவியது.
ஜேம்ஸ்வெப் எனும்
பிரபஞ்சத்தின்
முண்டைக்கண் விடாது துரத்தியது.
கர்த்தரின் கர்த்தர்கள்
குமாரர்களின் குமாரர்கள்
வசனங்களை
மழை பொழிந்தார்கள்.
வசனங்கள் புத்தகங்கள் ஆயின.
ஈடன் பூங்கொத்துக்களைக்காட்டுகிறது.
அதனூடு ஏன்
இந்த ஓலங்கள்?
மரண அவலங்கள்.
புகை மூட்டம்.
தீ மழை.
சூன்யத்தை பிளந்து பார்த்து
சூட்சுமத்தைத்
தொட்ட மனிதன்
ஏன் இப்படி
கல்லறைகள் கட்டுகின்றான்.
அது
வீடா?
கோவிலா?
இன்னும் காடு தானா?
மரக்கிளைகள் அசைந்து கொண்டிருக்கின்றன.
செங்கனி நிழல் காட்டியதில்
வெளிச்சத்தின் பழத்திலிருந்து
இருட்டின் விதைகள்
தெறித்துச்சிதறுகின்றன.
_____________________________________________________
ருத்ரா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக