அகழ்நானூறு 3
____________________________________________
சொற்கீரன்
"குடுமி நெற்றி நெடுமரச்சேவல் "
-------------------------------------------------------------------
சொற்கீரன்
புலால் நாறு கடல்புறத்து மருங்கில்
முரல் பறை நாரை சிறை கவிழ் வானம்
எல்லும் மறைக்கும் ஆங்கே இருளும் ஒளியும்
மயங்கித்திரியும் எக்கர் ஞாழல
கரை சோர்ந்து திரை எதிர் நோக்குவாள்.
பல்கண் கோர்த்த ஒலிமணி வலையில்
மீன்பொதி குவிய திரும்புவான் என
அலைபொரு நுரையென கரைவாள் உடைவாள்.
அலவன் உழுத அரிகுரல் வரிய
மணல் அளைச் சீறடி எழுதிய யாப்பின்
கல்லாடம் அவள் கண்ணுழி ஓச்சும்
தமிழ் விடிவானப் பண்ணில் தோய்ந்தான்.
கொல்சுறா கோட்டின் எறியும் முறித்து
கடல்விளை இனங்கயல் படகின் நிரப்பி
பாய்திரைப் பின்னிட விரைந்தான் அவனும்.
"குடுமி நெற்றி நெடுமரச்சேவல் "
கீறித் தந்த குணவாயில் கோட்டம்
இன்னகை காட்டி அவள் வாலெயிற்றின்
வள் ஒளி வழங்கி வழி நீராட்டும்.
அவள் ஏற்றிய வைகுசுடர் உள்ளே
உரம் தந்து அருஞ்சுரம் அனைத்தும்
அகலத்தந்து கொல் யாறும் நல் யாறே என
நனி ஊறும் களி படர்ந்தற்று
பசப்புமுன் பணைத் தோள் பற்றி அவள்
நோதல் தவிர்த்தான் அற்றே அடைந்து.
--------------------------------------------------------------------------------
குறிப்பு உரை
----------------------------------------------------------------------------சொற்கீரன்.
எனது "அகழ்நானூறு" தொகுப்பில் இது 3 வது செய்யுட்கவிதை.
அகநூனூற்றுப்பாடல் 87 ல் மதுரை பேராலவாயனாரின் சொல்லாற்றல் பெருமை மிக்கது.
வீட்டு த்தலைவன் பொருள் தேடி ஈட்டிய பின் அருஞ்சுரம் கடந்து வருகையில் நகருக்குள் "தன் உச்சிக்குடுமி குலுங்க குலுங்க கூவும் அந்த நெடு மரத்துசேவல் "பற்றி "குடுமி நெற்றி நெடுமரச்சேவல் " என்று குறிப்பிடுகிறார். எனது மனக்கண்ணில் அந்த சேவலின் தோற்றம் பெரும் வியப்பையூட்டுகிறது.இந்த வரியைத்தான் எனது இந்த சங்கநடைச்செய்யுட்கவிதைக்கு தலைப்பாய் சூட்டியிருக்கிறேன். மேலும் "வைகு சுடர்" என்றால் "விடி விளக்கு".அது நகரங்களில் ஏற்றப்பட்டிருக்கும் என்று குறிப்பிடுகிறார்.நான் அவனுடைய இல்லத்தலைவி அவன் நெஞ்சில் ஏற்றிய விடி விளக்கு அவன் கடந்து வரும் காட்டு வழியையும் நல்ல வழியாய் ஆக்கி மீட்டு வரும் என்று எழுதியிருக்கிறேன். மேலும் தலைவனான அவன் கடலில் சென்று மீன் பிடித்து திரும்பும் வரை கடற்கரையில் காத்திருந்து அவள் பிரிவுத்துயரம் உற்றதையும் எழுதியிருக்கிறேன்.அப்போது அவள் கால்விரல்கள் மணலில் அளைந்து அளைந்து கிறுக்கிய வரிகள் நண்டுகள் அந்த மணலில் உருவாக்கிய வரிகளைப் போலிருக்கின்றன.ஆனால் அவை தலைவனுக்கு புகழ்பெற்ற அந்த "கல்லாடன்"எழுதிய வரிகளைப்போன்று இருக்கிறதாம்.
சான்றாக அகநானூறு பாடல் 83 ல் உள்ள கல்லாடன் எழுதிய வரிகளைப்பாருங்கள்:
"வலம் சுரி மராஅத்துச் சுரம் கமழ் புதுவீச்
சுரி ஆர் உளைத்தலை பொலியச் சூடி "
இந்த வரிகளை படிக்கும் போது கல்லாடனாரின் யாப்புத்திறன் மிகவும் நுணுக்கம் நிறைந்தது என்றும் தமிழின் சொல் இயல் அதன் பொருள் அழகு யாவும் படித்து இன்புறத்தக்கவை என்றும் அறிகிறோம்.
வலப்புறமாக சுருளும் இயல்புடைய "மராமரம்" பூத்த சிறு பூக்கள் கொண்ட மாலையை அலை போல ஆடும் அழகிய சுருட்டை முடிகொண்ட மலைஞர்கள் (கல்லர்கள் ) சூடிக்கொள்வது பெரும் அழகு என்கிறார் கல்லாடனார்.
"கல்லாடனாரின்" இந்த சொல் ஆளுமையே என்னை பெரிதும் ஈர்த்து எனது இந்த சங்க நடைசெய்யுட்கவிதையில் "அவர் பெயரை" எழுத வைத்தது.
இந்த கல்லர்களே கல்லாடர்களாக மருவி அதில் சிறந்தவர்கள் "கல்லாடனார்களாக "ஆகியிருக்கலாம்.இந்த மலைவாழ்னர்களில் "வால்மீகி"கள் இருந்திருக்கலாம்.(வால் மிகி எனும் வேர்ச்சொல்) ஒளி மிகுந்த எறும்புகளை (கரையான்) குறிக்கலாம்.வால் மிகிக்கு சமஸ்கிருதம் தெரிந்திருந்தால் "தமிழின் மரவம் எனும் மரா மரத்தைசுசுட்டிக்காட்டியா நாரதர் "ராமன்" பெயரை ஒலித்துக்காட்டவேண்டும்? ஏதாவது ஒரு எழுதப்படாத வரலாற்றுக்குறிப்பின் படி அந்த( தமிழ் )வேடன் வேற்று மொழி பேசுபவனாகவும் அப்புறம் (காளி தாசன் போல் வடமொழியில் எழுதுபவனாகவும் ஆகியிருக்கலாம்.மரவம் என்றும் குரவம் என்று காட்டின் மரங்களை சங்கத்தமிழ் குறிக்கிறது.இன்னும் மேலே காட்டியது போல் "மராஅத்து "என்ற சொல் வழக்கமே "மரா"மரம் ஆகியிருக்கலாம்.
(ஆராய்சசியாளர்களே !கவனிக்க!)
--------------------------------------------------------------------------சொற்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக