சனி, 24 டிசம்பர், 2022

"அகழ்நானூறு" 4 ன் பொழிப்புரை

  "அகழ்நானூறு" 4 ன் பொழிப்புரை

____________________________________________________

சொற்கீரன்.


"ஒரு அரிசோனன்" என்கிற என் இனிய அமெரிக்க நண்பர் "அகழ்நானூறு" 4 ன் "பொழிப்புரை" எழுதுங்கள் என்று எழுதியிருந்தார்.அவருக்கு எழுதியதே இந்த பதிலுரை.


நான் எழுதிய மற்ற சங்கநடைச்செய்யுட் கவிதைகளை பொழிப்புரையுடன் தான் எழுதியுள்ளேன்.இதற்கு முன் எழுதிய "அகழ்நானூறு 3"ல் குறிப்புரை ஒன்று எழுதியுள்ளேன்.அதில் தலைவி கடற்கரையில் மீன் பிடிக்கச்சென்ற தன் தலைவன் வரும் வரை பிரிவுத்துயரோடு இருப்புகொள்ளாமல் தவித்து கால்விரல்களால் கிறுக்குவது மணலில் நண்டுகள் ஊர்ந்ததால் ஏற்படும் வரிகள் போல இருக்கின்றன என்றும் அது தலைவனின் மனக்கண்ணில் புலமை மிக்க "கல்லாடனாரின்"செய்யுள் வரிக்களை ஒத்து இருப்பதாகவும் எழுதியிருக்கிறேன்.

நான் வல்லமையில் 2015 ல் ஓலைத்துடிப்புகள் என்ற பெயரில் இது போன்ற சங்கநடைச்செய்யுட்கவிதைகள்

நிறைய(பொழிப்புரைகளுடன் தான்) எழுதியுள்ளேன்.இப்போதும் நான் எழுதும் ஒவ்வொரு செய்யுட் கவிதைக்கும் பொழிப்புரை எழுதுகிறேன்.இருப்பினும் சங்கத்தமிழ்ச்செய்யுட்களின் அழகும் பொருள் ஆழமும் கற்பனைச்செறிவும் நிறைந்த சொற்களை படித்து இன்புற்ற போது தமிழ் ஆர்வத்தில் உடனேயே எனக்குத்தோன்றும் சொற்களை "பொறியாக"க்கொண்டு இந்த கவிதைகளை எழுதுகின்றேன்.அதற்கு விரிவாக‌

உரை எழுத விரைவாக தட்டச்சு செய்ய வேண்டும்.அதற்கு பொறுமையும் வலிமையும் இல்லாததால் பொழிப்புரை இன்றியே பல செய்யுட்கவிதைகளை பதிவு இட்டுள்ளேன்.நீங்கள் இப்படி பொழிப்புரை விரும்பி எழுதியது எனக்கு இன்னும் ஆர்வத்தூண்டல் அளிக்கிறது.ஆனாலும் பொழிப்புரை இல்லாமல் பதிவிடுவது மிகத்தவறு தான்.உங்கள் ஆர்வமும் ஆதரவுமே என் பேனாவுக்குள் ஊறும் தமிழ் இலக்கிய தாகம் ஆகும்.


 பொழிப்புரை

______________________________________________________________________________

அகழ்நானூறு  4

________________________________‍

சொற்கீரன்


வரைமுதற் சிதறிய மண்ணா முத்தம்

ஆலி இழைய  பளிங்கு நீராட்டி

கழை ஆடு அடுக்கத்து மஞ்சுபடு கடாஅம்

வௌவ்வும் கொலைநர் படர் அகல் எஃகம்

குழாஅத்த அடர்சுரம் அளைஇ ஆறு தடவி

அறஞ்செய் பொருளுக்கு ஆவி பொருட்டன்று என‌

ஆன்றவன் துப்பின் துணைசேரச் சென்றான்.

பானாட் கங்குல் ஞெகிழியிற் கொடிவிடு 

மின்னல் போழ்ந்த நெடுவான் பொறாது

பூமயிர் இறைவளை நெகிழ நோன்றாள்.

உளைமா கலித்த பரியொலி கேட்டனள் 

ஊர்ந்து தரை தொடுமுன் அவள் எல்வளை 

ஏறல் உற்றதாய் களியின் வீங்கு 

எறி கடல் ஆர்த்து இன் நகை பூத்தாள்.

--------------------------------------------------------------------------------------


பொருள் தேடிச்செல்லும் தலைவன் செல்லும் வழியைப்பற்றி இப்பாடல் சொல்கிறது.

மலைப்பாறைகள் நீரால் கழுவப்படாத முத்துக்கள் சிதறிக்கிடப்பது போல் தோன்றுகின்றன.அங்கே பெய்யும் ஆலங்கட்டி மழையின் பளிங்கு விழுதுகள் வரி வரியாய் நீராட்டி படர்கின்றன.உயர்ந்த மூங்கில் மரங்கள் ஆடுகின்ற அந்த  மலைத்தொடர்களில் மழைமேகங்கள் தழுவும் வழியில் அவன் கடந்து செல்லும்போது வழிப்பறி செய்யும் கள்வர்களின் கொலைவெறி மிக்க இலை போல அகலமான எஃகு வேல்கள் இடைப்படுகின்றன. அக்கூட்டத்தாரால் அடர்ந்த அந்த காட்டுவழியில் கால் பதித்து அளைந்து செல்கிறான்.அறத்தொடு நின்று பொருளீட்டுவதில் உயிரையும் பொருட்டாகக்கொள்ளாமல் முன்னேறிச்செல்கிறான்.அதற்கு தகுதியும் திறமையும் மிக்கவனாய் தன் வலிமை ஒன்றையே துணையாகக்கொண்டு செல்கிறான்.அந்த நட்ட நடு இரவில்

அவர்கள் எறிகின்ற தீப்பந்தங்கள் வானில் மின்னலின் கொடியைப்போல் பிளந்து கொண்டு விழுகின்ற காட்சியை காணப்பொறாதவளாய்  தலைவி துயரம் கொள்கிறாள்.பூப்போன்ற மெல்லிய மயிர்கள் உடைய அவளது முன் கையின் வளையல்கள் நெகிழ்ந்து விழுமாறு துயர் கொள்கிறாள்.அப்போது பிடறியை உலுக்கிக்கொண்டு குதித்துவருகிற தலைவனின் குதிரையின் ஒலியைக்கேட்கிறாள்.நழுவி நழுவி ஊர்ந்து அவள் வளையல்கள் தரையில் விழ தொடு முன்னரே அவள் அடைகின்ற எல்லையில்லாத மகிழ்ச்சியில் ஒளி மிக்க அவள் வளையல்கள் களிப்பு மிகுதியால் கையில் ஏறிக்கொள்கின்றன.மகிழ்ச்சியின் அந்த பொங்குமாங்கடல் வீசும் அலைகள் எழுந்தததில் இன்முகத்தோடு முறுவல் பூத்தாள்.

____________________________________________________________________________

சொற்கீரன்




 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக