சனி, 3 டிசம்பர், 2022

கல்


கல்

____________________________________

ருத்ரா




ஓடிப்பிடிச்சு விளையாடலாம்

வாருங்கள்.

கடவுள் போய் ஒளிந்து கொள்ளட்டும்

அல்லது 

அப்படி ஒருவர் இல்லாமலேயே

நாம்

அப்படி ஒருவர் இருப்பதாகவும்

அவர் ஒளிந்து கொண்டிருப்பதாகவும்

நாம் அவரை

தேடிக்கண்டு

பிடித்துக்கொள்வதாகவும்

விளையாடலாம்.

இந்த விளையாட்டு தான் இங்கு

விறு விறுப்பாக இருக்கிறது.

சுறு சுறுப்பாகவும் இருக்கிறது.

இதில் கொஞ்சம் அலுப்பு தட்டுகிறது.

"கடவுள்"என்றால் என்ன‌

என்று

கண்ணை மூடி 

சிந்தனையை கூர் தீட்டி

புலித்தோலோ மான்தோலோ

எதன் மீதாவது 

அமர்ந்து தேடுவோம்

அதாவது ஆழ்நிலையில் ஆழ்ந்து

தேடுவோம்.

இதிலும் தொய்வு அடைகின்றோம்.

இருட்டே திரையாகி

இருட்டே படமாகி

ஒரு திரைப்படம் காட்டுகிறது.

நனவும் கனவும் கலந்த‌

படலம் விரிகிறது.

அப்புறம் 

விலுக்கென்று விழித்துக்கொள்கிறோம்.

என்ன கடவுளை பார்த்துவிட்டீர்களா?

அருகில் அமர்ந்தவர் கேட்கிறார்.

என்னது?

கடவுளா?

யார் அது?

கேள்வி பிறக்கிறது விடையாக.

கண்டுவிட்டேன்.

கண்டுவிட்டேன்.

விடை பிறக்கிறது கேள்விக்கு.

இந்த விளையாட்டு எப்படி?

விளையாட்டு போல் இப்படி

விளையாடுவதே வாழ்க்கை.

விளையாட்டை 

துவக்கவும் முடிக்கவும்

அதோ விசில் ஊதுகிறாரே

அவர் யார்?

அவரும் நம்மோடு 

விளையாட வந்தவரே.

அது அவர் விளையாட்டு.

அவர் ஒன்றும் எனக்கு

ஒரு கோவில் கட்டு என்று 

சொல்லவில்லை.

நாம் தான் அந்த‌

விளையாட்டுக்கூட்டாளிக்கு

கோவில் கட்டிக்கொள்கிறோம்

அதுவுமே ஒரு விளையாட்டு.

அவர் என்றில்லை

கூடவே ஒரு

பன்றிக்குட்டியோ நாய்க்குட்டியோ

வந்து விளையாடினால்

அதற்கும் உண்டு ஒரு கோவில்.

ஆகா..இது என்ன சித்தாந்தம்!

புல்லரிக்கிறது!

புல்லா?

புல் புழு எதுவாயினும்

டி என் ஏ...ஆர் என் ஏ

என்று உயிருக்குள்

பிளந்து பார்ப்பதே இங்கு

விஞ்ஞானம் எனும் மெய்ஞானம்.

ஞானம் எனும் அறிவும்

முதலில் கல் தான்.

அதைப்பிளந்து அல்லது உரசி

உற்றுப்பார்ப்பதே இங்கு "கல்"வி.

கல்வி இருக்குமிடமே கோவில்.

மற்ற இரைச்சல் கூடங்கள் பற்றி

யாருக்கு இங்கு கவலை இல்லை.


____________________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக