இளையராஜா
__________________________
ருத்ரா
ஒரு இன்னிசைத் தீவு இவர்.
அலைகள் வந்து
சும்மா குசலம் விசாரித்து விட்டுப்போகும்
இவர் வீசிய ஒலிப்பூஞ்செண்டுகளிடம்.
உளைச்சலுறும் மனங்களின்
தொட்டில் கூடு
இவர் கொடுத்த பண்கள் அமைத்த
தூண்களில் தான்.
இந்த அமைதிப்பூங்கா
ஏன் இன்று கொதிக்கிறது?
குதிக்கிறது?
மனிதர்கள் அடிமைச்சங்கிலிகளில்
இருந்து கொண்டு தான்
தேவாரம் என்றார்கள்.
திருவாசகம் என்றார்கள்.
ஜனனி என்றார்கள்.
சிவ ஓம் என்றார்கள்.
சங்கீத வர்ணத்துள்
சங்கிலி மாட்டிக்கொண்டு வந்தது
சனாதன வர்ணங்கள்.
ஆனால்
அறிவின் சிற்றுளி பட்டு
தெறித்த வைரத்திவலைகளில்
கோடி சூரியன்கள்
கொப்பளித்தார்கள்
விடுதலை என்று.
தமிழ் என்று.
தன்மானம் என்று.
மனிதம் என்று.
இளையராஜா அவர்களே.
எங்கள் காதுகளில்
இனிய வண்டுகளாய் சிறகசைத்தீர்கள்.
எங்கள் இதயங்களைத் தொட
ஏன் மறுக்கிறீர்கள்?
மனிதம் மகத்தானது.
இறைவம் அதில் தான்
நிழல் காட்டுகிறது.
சாதி மத வன்மங்களுக்கு
மெட்டு அமைக்கவா
இந்த ஆர்மோனியப்பெட்டிக்குள்
அடைக்காத்துக்கொண்டிருந்தீர்கள்?
இசை
மனித சமுதாயத்தின்
அபஸ்வரங்களை
சம கீத இனிமைக்குள்
ஸ்வரப்படுத்த தவறிவிட்டால்
அந்த இசைக்கு ஞானம் ஏது?
அந்த இசைக்கு ஞானி ஏது?
இந்த கேள்விக்குள் ஒளிந்திருக்கும்
அந்த அக்கினி ராகத்துக்கும் கூட
நோட்ஸ் எழுத
உங்களால் முடியும்.
அதற்குள் உங்கள் கைககளுக்கு
ஒரு அரசியல் சங்கிலி வந்து
பூட்டு போட்டு விட்டதே.
இளையராஜா அவர்களே
கதவுகளை திறந்து கொண்டு
எப்போது அந்த
இனிய சுவாசத்தின் விடுதலை ராகத்தை
இசைக்கப்போகிறீர்கள்?
__________________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக