ஒரு தரிசனம்
________________________________ருத்ரா
கடவுளே
எனக்கு வார்த்தைகளில்
சண்டை போட
நீயே தகுதியானவன்.
உன்னை நோக்கி வீசும்
எதிர்ச்சொற்கள்
எனக்கு
மாலையாகி விழுகின்றன.
நடுநிசியில் ஒரு பயத்தின்
வர்ணம்
என்னைப்பூசிக்கொள்ளும்போது
என் சொற்கள் உனக்கு
ஆனைத்தும்பிக்கை அளவுக்கு
மாலை தொடுத்து
சூட்டும்போது
நான் உன்னிடம் வேண்டும்
அபயக்குரல்
என்னைக் கேலியின் கிண்டலின்
காக்காய் முள்ளாய் குத்துகிறது.
நாங்கள் உனக்கு
பிரம்ம சூத்திர பாஷ்யம்
எழுதுவது போல்
அன்றைக்கு ஒரு நாள்
ஒலியற்ற ஒலியில்
இந்த மனிதனை
அவன் அறிவை
அவன் சமூக அக்கறையை
உன் பாணியில்
ஒரு சகஸ்ரநாமம் போல்
தொடுத்துக்கொண்டிருந்தாய்.
அதில்
ஃபெர்மியானையும்
போசானையும்
வித்யாசம் இல்லாமல் ஆக்கி
ஒரு சூப்பர் சிம்மெட்ரியை
"அதிர்விழை"எனும்
நுண் நடுக்கத்தைக்
காட்டிய மனித அறிவின் முன்
வியந்து களித்து
நர்த்தனம் ஆடினாயே.
போதும் போதும்
கோவில்களுக்கு கனத்த பூட்டுகளை
மாட்டுங்கள் என்றும்
விண்ணொலி முரலச்செய்தாயே!
அது
உனக்கே
ஒரு பிரம்மை!
மனிதனுக்கு பிரம்மம்.
பிரம்மத்துக்கு மனிதன்.
மரப்பாச்சிகளின்
அறிவு விளையாட்டா இது?
கடவுளே
நீயே ஒரு நாத்திகனாய்
நிற்கும்
அந்த தரிசனம் இருக்கிறதே
அதற்கு
ஈடும் இல்லை
இணையும் இல்லை.
_______________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக