எதற்குள் எது?
______________________________
ருத்ரா
துப்பாக்கிகள்
கண்டு பிடித்த மனிதனே!
அவை
உன் மரணங்களுக்கு
விதை தூவின.
உன் அறிவை வியந்த இறைவன்
உன் அழிவில் இருந்தும்
உன்னை உணர்ந்து கொண்டான்.
நீ முற்றுப்புள்ளியாய் விழுவதற்கு
வந்தவன் அல்ல என்று
உன்னை மீண்டும் நிமிர்த்தி வைக்க
உன் நிழலைத் தேடினான்.
அவனுக்கு உன் மீது பொறாமை.
அவன் தன் மீது பக்தி கொள்
என்று தான்
வரம் கொடுக்கத்தெரிந்திருந்தது.
ஆனால் நீயோ
மானிடநேயம் என்றொரு மகத்தான
சக்தியை அலை பரப்பி வைத்திருந்தாய்.
அதன் மகரந்தங்கள் மீண்டும்
பூக்காடு ஆவதற்குள்
நடந்த விபத்து தான்
அந்த துப்பாக்கியும் அதன் பின் வந்த
அணுகுண்டுகளும்.
கடவுளின் விபத்துதான் சைத்தான்
என்று சொல்லிக்கொள்வோமாக.
இறைவன்
உன்னிடம் பெரும் ஈர்ப்பு கொண்டான்.
அந்த விபத்தில்
மரணமூட்டம் இந்த பூமி
முழுவதையும் சுடுகாடு
ஆக்கியிருந்தது.
மனிதா! உன் நிழல்
இறைவனிடமா?
இல்லை
அந்த இறைவனின்
நிழல் உன்னிடமா?
இந்த கேள்விக்குள்
பதில் ஒரு விதை.
அந்த பதிலுக்குள்ளும்
அந்தக் கேள்வி ஒரு விதை.
பாழ்வெளியில்
பரிணாமம் மீண்டும்
விரல் தீண்டியது.
ஒரு சப்பாத்திக்கள்ளி
நீட்டிய நிழலில்
ஒரு மண்புழு ஊர்ந்து
மீண்டும் மண்ணைத்திறந்தது.
பசுமை சன்னலில்
புதிய அகர முதல கேட்டது.
அங்கே
கடவுள்கள்
வரிசையாய் உட்கார்ந்து
மனிதன் வாழ்த்து
பாடினார்கள்.
நாத்திகத்தின் விதை
ஆத்திகத்துக்குள்.
ஆத்திகத்தின் அழிவு
மீண்டும் நாத்திகத்துக்குள்.
________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக