புதன், 28 ஏப்ரல், 2021

கண்ணாடிக்குப்பி

கண்ணாடிக்குப்பி

________________________________ருத்ரா


மண்டியிட்டு வழிபடுகிறோம்

உன்னை.

ஓ! இறைவா!

எங்கள் மரண ஓலங்களை நிறுத்து.

இனிய இசையில்

எத்தனை பாடல்கள் நாங்கள்

உனக்கு தினம் தினம் 

பாடுகின்றோம்.

அதை விட்டு

இந்த மரண ஓலங்களா

உன் செவிகளில் இன்பம் பாய்ச்சுகிறது?

நாங்கள் உன் குழந்தைகள்.

அந்த ஆகாயத்திலிருந்து தான்

எங்கள் தொட்டில்களை ஆட்டுகிறாய்.

ஆனால்

எதற்கு இந்த 

வெண்டிலேட்டர்களைக்கொண்டு

எங்களை பயமுறுத்துகிறாய்?

பூதங்கள் போல் உடைதரித்து

மருத்துவர்களும் செவிலியர்களும்

எங்கள் உயிர்களை காப்பாற்றியே

தீருவோம் என்ற தீர்மானத்தில்

ஓ!இறைவா

நீயும் உடன் இருக்கிறாய் 

என்று தானே நம்புகிறோம்.

அப்படியிருந்தும்

பிணங்கள் எரியும் சுடுகாடுகளில்

நீ கோல்ஃப் விளையாடிக்காட்டியா

முறுக்கல் காட்டுகிறாய்.

அந்த நுண்ணுயிரிகள்

எவ்வளவு அற்புதமானவை! அழகானவை!

அந்த அறிவியல் நுட்பம் கொண்ட‌

வாயினாலா இந்த மரணங்களை

எங்கள் மீது நீ உமிழ்வது?

நீ எங்களுக்குத் தெரியாமல்

இந்த ரகசியங்களை எங்கள் மீது

சோப்புக்குமிழிகள் போல்

ஊதினாலும்

எங்கள் அறிவின் நுண்ணோக்கில்

உன் திருவிளையாடல்களையும்

தடுப்பூசிகள் ஆக்கி

உன்னோடு விளையாடுகிறோம்.

போட்டி பொறாமைகளுக்கு

அப்பாற்பட்டு விளையாட வேண்டிய நீ

எங்களோடு 

அழுகுணி ஆட்டம் அல்லவா ஆடுகிறாய்.

லட்சக்கணக்கிலா

பிணங்கள் வேண்டும்

உனக்கு நைவேத்தியம் கொடுக்க?

விலங்குகள் 

மனிதர்கள் 

அப்புறம்

கடவுள்கள் என்று

ஒரு ஏணி வைத்திருக்கிறாய்.

நாங்களும் எங்களுடைய‌

"நூலேணி"கொண்டு ஏறி

உன்னை மிஞ்சி விடுவோமோ

என்ற பயமா உனக்கு?

எங்களுக்கு பயமில்லை.

எங்கள் நம்ப்பிக்கையின் சிகரம்

உனக்கு எட்டுமா?

தெரியாது.

உன் சிகரத்தில் 

இப்படி ஒரு கோர தாண்டவம்

நீ ஆடிக்கொண்டிருக்கும்போது

உன் தலையில் ஒரு கண்ணாடிக்குப்பி

வந்து விழுகிறது.

அதனிடம் உன் நெற்றிக்கண்ணை

திறந்து கேட்கிறாய்.

யார் நீ? எங்கிருந்து வருகிறாய்?

அது சொல்கிறது.

அய்யனே தெரியவில்லை..

என்னவோ ஒளியாண்டுகள் என்று சொல்கிறார்கள்

அப்புறம் பில்லியன் பில்லியன்...பில்லியன்...

என்று சொல்லிக்கொள்கிறார்கள்.

அவ்வளவு உயரத்திலிருந்து வருகிறேன்.

அது என்ன?

கடவுள் கர்ஜிக்கிறார்.

அறிவு..அறிவியல்...அப்புறம் 

ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்..

அப்புறம் லாஜிக்கல் கோடிங்க்..

அப்புறம் இன்னும் என்னவெல்லாமோ

சொல்கிறார்கள்.

என்னை விடவா அது உயரம்..

ஆமாம் அய்யனே

அதை ஐ க்யூ என்கிறார்கள்.

அவர்கள் உட்கார்ந்திருக்கும் ஐ க்யூ

பில்லியன் கணக்கில்.

"உன்னை கடவுள் என்று கற்பிக்க"

ஒரு பத்து பன்னிரெண்டு ஐக்யூ

இருந்தாலே போதுமாம்?

நீ அநாவசியமாக‌

"பொம்மை கேம்ஸ்" ஆடுகிறாயாம்!

நீயும் மனிதனின்

அறிவுப்பிழம்பில் பிறந்தவன் 

என்பதால் தான்

இந்த கும்பாபிஷேகமும் கொட்டுமுழக்கும்

உனக்கு தருகிறோம்

என்கிறான் அற்பப்பயல் மனிதன்..

அது இன்னும்

ஐஸ் வைக்க என்னென்னவோ

சொல்லிக்கொண்டே இருந்தது..

"சரி சரி நிறுத்து..

இந்த மனிதக்குஞ்சுகளின்

விளையாட்டுப்பொம்மைகள் தாம் 

நாம்.

போறான்கள் பயல்கள்..விடு.

அந்த குப்பியைத்தா"

அந்த பொன்னார் மேனியன்

புலித்தோலை அரைக்கசைத்திருந்தான்.

மெதுவாக அந்த குப்பியை

புலிதோல் ஆடைக்குள் செருகிக்கொண்டான்.

தடுப்பூசிக்குப்பிகள்

சிரித்துக்கொண்டன 

அது அவனுக்கு

கேட்டிருக்குமா? இல்லையா?

தெரியவில்லை.


____________________________________________









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக