கண்டா வரச்சொல்லுங்க..
______________________________
ருத்ரா
காட்டாறு போயிடுச்சு
கடுவெளியாய் ஆயிடுச்சு.
கனவ வெதையாக்கி
இறைச்சுப்புட்டோம்
வெதச்சுப்புட்டோம்
கதிர் மகன் எந்திரிப்பான்
கண்டா வரச்சொல்லுங்க.
கண்ணுல கண்ணுவச்சு
காணத்தான் தவிக்கின்றோம்
கண்டா வரச்சொல்லுங்க
பொட்டிகள அங்கே
குவிச்சு வச்சிட்டாக.
"பொறி" வெச்சு புடிக்க இது
காடையில்ல குருவியில்ல
பூபாளம் பாடுகிற
குயிலுகளின் கூட்டமெல்லாம்
கூடு வச்சு கெடக்குதங்கே.
பாடு பாடுன்னு நாங்க
எத்தன பாடு பட்டிருக்கோம்
செறகு மொளைச்சு அவை
வானம் முட்ட முழிச்சுகிட்டு
எந்திரிச்ச பேரொளியை
கண்டா வரச்சொல்லுங்க
எங்க இருட்டெல்லாம்
கரையுமுண்ணு
கண் பூத்து கெடக்குறோமே
கண்டா வரச்சொல்லுங்க.
வல்லூறுக வட்டமிடுத
வகையால்லா தெரியுது.
வல பின்னி சதி பண்ணி
சாய்ச்சிருவாங்களோ
நம் சரித்திரத்த.
பீஹாரப் பாத்துபுட்டொம்
ஊரு சனம் உலக சனம்
உண்மையெல்லாம் பாத்தாக.
கடேசி நேரத்துலே அவுக
கவுத்தினதையும் பாத்தாக
எரிமலைக ஊமையாச்சு.
கேள்வி கேக்க நாதியில்ல
அதனாலதான் பயப்புடுறோம்
பாரத மாதா தானே
நமக்கெல்லாம் மாரியாத்தா!
அவள நீங்க அன்புடனே
கண்டா வரச்சொல்லுங்க
நீதி காக்க வேணும்முன்னு
பொங்க வைப்போம் கும்பிடுவோம்
கண்டா வரச்சொல்லுங்க!
தமிழு ரெத்தம் எல்லாம்
கொதிக்குதய்யா குமுறுதைய்யா
தமிழுச்சாதிச் சனங்களே இந்த
தமிழுச்சத்தம் கேக்கலையா
புதுப்பூமி மொளைக்குமுண்ணு
சொன்னாக..காத்திருக்கோம்
..அந்த
புதுமொகம் சொலிக்கிறத
கண்டாக்க தாக்கல் சொல்லி
கண்குளிரச் செஞ்சுடுங்க
கண்டா வரச்சொல்லுங்க அந்த
பொன்னுலகை காட்டிடுங்க.
__________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக