ஒரு நினைவுப்பிழியல்
______________________________________________________
புதன், 28 பிப்ரவரி, 2018
மயிலு
======================================
ருத்ரா
பட்டிக்காட்டு புழுதி மண் துளி
ஒவ்வொன்றும்
வைரப்பொடியாய் ஆனது ஒரு நாள்.
அந்த "சப்பாணியும்" மயிலுவும்"
திரைப்பட இலக்கியத்தில்
ஒரு புதிய மைல்கல் நட்டுவைத்தனர்.
கிராமத்துக்கட்டப்பஞ்சாயத்து
நம் ஜனநாயகத்தின்
வெறும்
சமுக்காளம் சொம்பு நாட்டாமை
ஃபார்முலா மட்டும் அல்ல.
நம் நாடி நரம்புகளின்
ஆல விழுதுகள் ஊஞ்சல் ஆடும்
வடிவம்.
இந்தப்பின்னணியில்
காதலின் கிராமத்து மின்னலை
ஜூஸ் பிழிந்து கொடுத்தவர் அல்லவா
ஸ்ரீ தேவி!
அந்த அகன்ற விழிகளும்
சிற்ப உணர்வு துடிக்கும்...
அந்த மூக்குத்திகள் கூட
பேசும்..
அழகிய மூக்கும்
நடித்துக்கொடுத்த
காவியம் மறக்கவொண்ணாதன.
பம்பாய் மார்க்கெட்
அவரது மூக்கை மாற்றி
முகத்தையும் மாற்றிய போதும்
நடிப்பு சிலிர்க்கும் அவர் சாதனைகள்
மறக்க முடியாதவை.
இன்று குளியல் தொட்டியில்
அவரது முற்றுப்புள்ளி
விழுந்த பின்
தொடரும் புள்ளிகளில் கூட
கல கல வென்று
முத்துக்கள் உதிரும்
அவரது சிரிப்பொலி
இந்தியாவின் எல்லா மண் வாசனையிலும்
இதயம் வருடுகிறது.
மூன்று முடிச்சுகளில்
இரண்டு சூப்பர் ஸ்டார்களுக்கும்
இடையில் ஒரு
திடுக் கதையை
அற்புதமாய் காட்டி அசத்தினார்.
சிவப்பு ரோஜாவில்
அவர் திகில் குரலின் அலறலில்
தியேட்டருக்குள்
ஏழுக்கும் மேல்
ரிக்டர் ஸ்கேலில் பூகம்பம்.
மூன்றாம் பிறையில்
அந்த செல்ல பப்பியுடன்
இன்னொரு பொமரேனியன் போல்
மூசு மூசுவென்று கொஞ்சுவதும்
கடைசியில் அந்த ரயில் காட்சியில்
கமலின் குரங்கு சேட்டைகளைக்கண்டு
கல்லாய்ப்போன ஒரு உணர்ச்சியை
மரப்பாச்சி சிரிப்பாய்
மத்தாப்பு வெளிச்சம் காட்டுவதும்
நம் நெஞ்சை பிசைகிறது.
அவரது
தென்னிந்திய படங்கள்
"மருதாணி"ச்சித்திரங்கள் என்றால்
வட இந்தியப்படங்கள்
கலை மிளிரும்
மெகந்திப்பிழியல்கள்.
இறுதி ஊர்வலத்தில்
அந்த பெட்டகத்தில் இருந்தது
அவர் உடல் அல்ல!
அவை யாவும் நமக்கு
கலையின் அமரத்துவம் காட்டும்
"பிலிம் சுருள்"கள்.
அதில்
இன்னும்
அவர் இதயம்
சூடாய் துடிக்கிறது
அதில் நம்
பழங்கனவுகள்
உயிர்த்து உயிர்த்து
ஆனால்
நம் கண்ணீரை
உதிர்த்து உதிர்த்து
செல்கின்றன.
===========================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக