ஞாயிறு, 18 ஏப்ரல், 2021

விவேக் எனும் பஃறுளியாறு.

 விவேக் எனும் பஃறுளியாறு.

___________________________________ருத்ரா



நீ தானே வைத்தாய்

எல்லாவற்றையும் எடுத்துக்கொள்

ஆக்சிஜன் தருகிறோம்.

நீ எங்களுடன் வந்து

சிரிப்பு மழை பொழிந்திடு!

மரங்கள் கண்ணீர் விட்டன.


எத்தனை படங்கள்?

காக்காய்க்கு தெரியாது

விதைகளை எச்சமிடுகிறோம் என்று.

ஆம்.

இவரும் சிரிக்கவைக்கும்போதே

நம் விடியல்களுக்கு

எத்தனை எத்தனை விதைகள்

தூவியிருக்கிறார்.



இவருக்கு அவர் விசிறியா?

அவருக்கு இவர் விசிறியா?

தெரியாது.

அந்த உலக மேதை

சிறப்பு விஞ்ஞானி அப்துல்கலாமும்

இந்த சிரிப்பு விஞ்ஞானி விவேக்கும்

பூவுலக இதயத்துடிப்புகளுக்கு

அன்பாக சாமரம் வீசிக்கொண்டார்கள்.

மனிதர்கள் இடையே

மனிதர்கள் மட்டுமே இடைவெளி.

அதுவும் சமுதாய நேசத்தால்

மிடையப்பட்ட அன்பின் இடைவெளி.

அதை மரண பயம் பூசி

பெரிதாய் ஆக்க வந்த

கொரோனாவுக்கு ஒரு ரகசியம்

தெரிய வந்தது.

இந்த சாவு கூட மனிதனின் சிரிப்பின் முன்

செத்து விடுகிறதே என்று

பொறாமையால் செத்துப்பொகும்

நிலைக்கு ஒரு நாள் வந்தது

அந்த கொரோனா.

அதன் சீற்றமே

விவேக்கின்

சிந்தனை ஆர் என் ஏ க்கள் கொண்ட‌

புதிய சிரிப்பாணி வைரஸை

நோக்கி படையெடுத்தது.

தடுப்பூசி போட்டா என் முன் வியூகம்

வகுத்தாய் என்று

அது மாரடைப்பு வியூகம் வைத்து

பழி தீர்த்துக்கொண்டது.

இப்போது புலம்புகிறது உன்னை நோக்கி.

ஓ மனிதா!நீ வென்று விட்டாய்.

சிரிப்பு சங்கிலியின் அந்த ரகசிய‌

ஆர்.என்.ஏ வை உன்னிடமிருந்து

பிடுங்கி விடலாம் என்றல்லவா நினைத்தேன்.

உன் முடிவுக்கு நான் காரணம் அல்ல.

என்னையும் முந்திக்கொண்டது உன் மாரடைப்பு.

இருப்பினும் எனக்கு ஒரு அற்ப சந்தோஷம்

அந்த தடுப்பூசியை ஒரு சமுதாயக்கடமையாய்

ஆக்கி மனம் பூரிப்பு அடைந்தாயே

அதன் விளைவாய் கூட இந்த மாரடைப்பு

உனது சிரிப்பு விஞ்ஞானத்தின் பாஸ் வர்டை

பறித்துக்கொண்டிருக்கலாம்!

அது போதும்.

அந்த கொரோனா ராட்சசன் பயங்கரமாய்

கொக்கரித்தான்.

எங்கள் விவேக என்கிற நகைச்சுவை முரசே!

மானிட சமுதாயத்தின் அக்கினி விதை அல்லவா நீ.

உன் அதிர்வு அலைகள் எல்லைகளை

நொறுக்கித் தள்ளிவிடும்.

உன் நகைச்சுவை எனும் ஆயிரம் வாலாக்கள்

வெடிக்கும் சிரிப்புகளின்

காட்டாறுகளுக்கும்

பொங்குமாங்கடல்களுக்கும்

பஃறுளி ஆற்று மூலமே நீ தான்.

சாதாரண ஆறா நீ?

பெரியார் எனும் பெரியாறுகளின்

பகுத்தறிவுச் சங்கமம் நீ

நான் தோற்றுவிட்டேன்.


இனி அந்த கொரோனா

"திருவிளையடலில்" வரும்

டி எஸ் பாலையாவின்

சங்கீத கோஷ்டி போல்

தலை தெறிக்க விழுந்தடித்து

ஓடினாலும் ஓடிவிடும்.


____________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக