புதன், 7 ஏப்ரல், 2021

விடுதலை

 விடுதலை

___________________________ருத்ரா



ஒரு புயல் வந்து

ஓய்ந்தது.

நம் தேர்தலை புயலுக்கு

ஒப்பிடுவது

முட்டாள் தனத்தின் சிகரம்.

புயலின் நோக்கம்

மாற்றம் மட்டுமே.

அழிவு என்பது அதன்

பாதையின் குறுக்கீடு.

ஆனால்

இந்த அற்ப மனிதர்களின்

தேர்தல் என்பது

சாக்கடையின் மழை.

வஞ்சகங்களின் புயல்.

நேர்மையாய் ஒரு 

அதர்மத்தை 

எதிர்ப்பதற்குப்பதில்

அதர்மங்களோடேயே

கைகோர்த்துக் கொள்வது

என்ன அறம்?

நேற்றைய தர்மங்கள் இன்றைய‌

அதர்மங்கள் என்று

பரிணாமம் பட்டயம் எழுதும்போது

இன்றைய அதர்மங்களுக்கு

கும்பாபிஷேகம் செய்யும்

குள்ளநரித்தந்திரங்களே

சாதி சமய சாஸ்திரங்களாய்

மனித சமுதாயத்தைக்கசாப்பு செய்ய‌

கத்தி ஏந்துகின்றன.

பத்திரிகைகள் எனும்

தராசுகளும் 

தறிகெட்டுப்போய்விடுகின்றன.

ஜனநாயக வெளிச்சத்தை

இருட்டடிப்பு செய்து 

தங்கள் கஜானக்களின்

கொலைகார வயிறுகளை

பணங்கள் கொண்டு 

ரொப்பிக்கொள்கின்றன.

மனித அறிவின் உச்சம் என்று

இந்த கணிப்பொறிகள் முன்னே

நம் ஜனநாயகக்கற்பை

விரல்களில் பச்சை குத்திக்கொண்டோம்.

அந்தோ!

இந்த விரல்களைக்கொண்டு

நம் கண்களைக்குத்தி

நம் விடியலை தரிசிக்கவிடாமல் 

செய்யும் இவர்களின்

சகுனித்தனமான வியூகங்களிலிருந்து

என்றைக்கு

நமக்கு விடுதலை?


___________________________________________


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக