மாத்தி யோசி
____________________________________ருத்ரா
ஹிட்லர் முசோலினியெல்லாம்
எதற்கு?
கொரோனாவைக்கூப்பிடுங்கள்
போதும்.
ஏ! இந்தியாவே வாயை மூடிக்கொள்.
வாலைச்சுருட்டி வாய்க்குள்
வைத்துக்கொள்.
பருவ மழை போல்
இந்த மரண மழை பெய்யும் போதெல்லாம்
ஊரடங்கு தான் எங்கும்
உச்சரிக்கப்படும்.
மெரீனாவில் அலைகள் வந்து வருடலாம்.
நண்டுகள் உலா போகலாம்.
பூங்காக்களில்
மலர்கள் பூக்கலாம்.
மகரந்தங்கள் உதிர்க்கலாம்.
மகாபலிபுரத்துக்கோபுரங்களில்
வௌவ்வால்கள் வரலாம் போகல்லாம்.
மனிதர்களுக்கு மட்டுமே இங்கு ஊரடங்கு.
கண்ணுக்குத் தெரியாத
நுண்ணுயிரிகளின் சர்வாதிகார ஆட்சிக்கு
தலை வணங்குவதே
பெரிய ஜனநாயகத்தின்
முதல் கடமை.
கொஞ்சம் மாற்றி யோசிப்போமே.
அந்த வைரஸ் உருவத்திற்கு
மனிதனும்
மனிதன் உருவத்திற்கு இந்த வைரஸும்
மாறினால் எப்படியிருக்கும்?
இந்த மனித வைரஸுக்கு
அந்த வைரஸ் மனிதர்களால்
தடுப்பூசிகள்
கண்டுபிடிக்கவே முடியாது.
போட்டி பொறாமை பேராசை
இவற்றின் உள் வைரஸான
"ஆட்சி அரசியல்"
எனும்
ஆர் என் ஏ மற்றும் டி என் ஏக்களுக்கு முன்
எல்லா விஞ்ஞானங்களும் மெய்ஞானங்களும்
தோற்று ஓடியே போய்விடும்.
அந்த அரசியலின் வினோத
பெருந்தொற்றின் ஊற்றுக்கண்ணே
தன்னலம் தன்னலம் தன்னலம் மட்டுமே.
_________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக