போதும் போதும்!
_________________________________ருத்ரா
சும்மாகிடந்தேன்
காகிதம் என்று.
என்ன எழுதுகிறாய் நீ
என் மீது?
மொழியின் அகராதியை
கரையான் போல்
சொல் சொல்லாய்
அரித்து எடுக்கிறாய்.
நான் எதற்கு அந்த
துணிவிரிப்பில் ஒரு
பிரபஞ்சத்தின் துளியாய்
வந்து விழுந்தேன்
என்று நீ
உன் பிரம்மத்தின் பொய்க்கடலுக்குள்
முங்கிக்களித்ததைப்பற்றி
பொங்கிப் பொங்கி எழுதுகிறாய்.
உனக்கு சுகமான ஒரு முகமூடி
என்று
அந்த ஆத்மிகம் பற்றி
சொற்களை உணர்ச்சியே இல்லாமல்
சிரச்சேதம் செய்கிறாய்.
கடவுளை அவர் கருவறைக்குள்ளிருந்து
வரவே விடாமல்
நீ செய்யும் கருச்சிதைவை
பாஷ்யம் பாஷ்யமாக எழுதிக்குவிக்கிறாய்.
மானுட பரிமாணம் பற்றி
மனதோடு எதுவும் எழுதுவதில்லை.
அநீதிக் கட்டுமானங்களுக்கே
உன் பளிங்குக்கற்களாலும்
பகட்டுச்சொல்லாடல்களாலும்
தோரணங்கள் கட்டுகின்றாய்.
கோவில் என்பது உடம்பு.
அதில் பூசை என்பது
மனிதப்பசையோடு ஒட்டியிருக்கும்
அன்பு மட்டுமே.
ஒரு கோவிலை இடித்து
இன்னொரு கோவில் கட்டும்
உன் வறட்டு வாஸ்து இஞ்சினீயரிங்கில்
மானுடத்தின் எலும்புக்குவியல்களா
மிஞ்சுவது?
என்னவோ எழுதுகிறாய்.
எதையோ பேசுகிறாய்.
வரலாறு மனித ஈரமற்ற
மரணங்களின்
கற்படுகை கொண்டு அடுக்கிய
காடுகள் அல்ல.
நீ எழுதியது போதும்.
இந்த எழுத்துக்களை பிணங்களாய்
குவித்ததும் போதும்.
மனிதச்சுடர் அணைந்துபோன பேனாவை
வெறும் "கில்லட்டின்" ஆக்கி
இந்த சுவடுகளை ரத்தச்சேற்றில்
அமிழ்த்தும் கொடுமைகள்
போதும் போதும்.
_____________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக