ஞாயிறு, 21 ஜூன், 2020

அப்பா

அப்பா
===============================================ருத்ரா



தந்தையை நினைவு கூர்வது
வைரத்தை எப்போதும்
பட்டைத்தீட்டிக்கொண்டிருப்பதை போல் தான்.
ஒவ்வொரு ஆண்டும்
ஒரு கதிர் துடிப்பு.
இன்று நான் தந்தையாக இருப்பது
மிக்க மகிழ்ச்சி
எனக்கு இப்போது 
தந்தை இல்லாத போதும்.
கால வகுத்தல் வாய்ப்பாட்டில்
மிச்சம் விழாத எண் அல்லவா அவர்.
வகுக்க முடியாத "ப்ரைம் நம்பர்"அவர்.
ஒரு கோணத்தில் நாத்திகராய் நிற்பார்.
இன்னொரு கோணத்தில்
புராணங்களை
ஒரு கீற்று விடாமல்
இழை பிரித்துக்காட்டுவார்.
எங்களுக்கு படிப்பு வழங்கினால் போதும்
வேறு சொத்து எதற்கு என்று
பொருளாதாரக்கடலில்
நீந்த விட்டு 
ஆனால்
நம்பிக்கையின் கட்டுமரமாய்
கூடவே மிதப்பார்.
என் தந்தை பட்டங்கள் வாங்கியதில்லை.
பத்திரிகைகளின் பத்திகளில்
புரண்டு கிடந்ததில்
அவர் எங்களுக்கு ஒரு பல்கலைக்கழகம்.
தத்துவங்கள் கடவுளைக் கண்டுபிடிக்கும்
என்பது ஒரு சித்தாந்தம்.
என் தந்தைப் பேச்சைக்கேட்ட போது
தத்துவங்கள் கடவுளைச்சுரண்டும்
வெறும் சொற்கள் தான்.
சுரண்டி சுரண்டி
சிந்தனைச்செதில்கள் உதிர்ந்ததே மிச்சம்.
சிந்தனை மட்டுமே அங்கு மிஞ்சும்.
கடவுள் இல்லை என்பதே
அங்கு ஒரு புன்சிரிப்பாய் காட்டிநிற்கும்.
என் தந்தை சொன்னார்.
விபூதி என்பது
மனிதனை வெறும் வெட்டியானாய் ஆக்க‌
தரப்படுவதில்லை.
பயப்படாதே கடவுளைக்கண்டு கூட‌
என்பதே அதன் உட்கிடக்கை.
கடவுளே
வா உன்னைக்கண்டு பயப்படவும்
நான் தயார்.
அதற்காக சுனாமியையும் கொரோனாவையும்
வைத்து பூச்சாண்டி காட்டாதே.
நீ
என்ன அறிவின் ஒளிப்பிழம்பா?
இல்லை
அறியாமையின் முரட்டுத்திரையா?
எப்படி இருந்தாலும்
நீ எங்கள் எதிரில் வா.
வந்து 
உள்ளேன் ஐயா சொல்லு.
இல்லை நான் இல்லை என்று சொல்லு.
என் அப்பா 
இப்படியெல்லாம்
பாஷ்யம் சொல்லவில்லை.
ஆனாலும்
இல்லை என்று 
சொற்களில்
தூவிவிட்டுப் போய்விட்டார்.
எதை நான் இல்லை
என்று சொல்வது
என் அப்பாவையா?
கடவுளையா?
அப்பா இல்லை என்றால் கூட‌
அப்பா இருக்கிறார் என்று சொல்லும்
ஆத்திகன் நான்.
அப்பாவுக்கே கடவுள் இல்லை
என்று நான் தெரிந்து கொண்டபோது
நான் ஒரு நாத்திகன்.

======================================================









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக