செவ்வாய், 16 ஜூன், 2020

கீற்றுகள்





கீற்றுகள்
_______________________________________________ருத்ரா

வானத்துணியில்
தைத்து தைத்துப்பார்க்கின்ற‌
கீற்றுகளே!
ஏதாவது ஒரு ஓவியம்
தைப்பதற்கு வருகிறதா?
காற்றின் அசைவில் 
பொங்கி வரும் 
ஊற்றில் அல்லவா
அந்த தூரிகைக்கீற்றுகள்
இத்தனை ஆர்ப்பாட்டம் செய்கின்றன.
அந்த ரவிவர்மா 
அப்படித்தான்
ஒரு தாய் தன் குழந்தைக்கு
பால் ஊட்டுவதாக‌
உயிர்ப்போடு
வரைந்திருந்தான்.
இன்று வரை 
அவள் அன்பின் திரைச்சீலைக்குள்
அந்த பிஞ்சுக்குழந்தை
இந்த பிரபஞ்சத்தையே
உறிஞ்சிக்கொண்டிருக்கிறது.
பிக்காசோ எனும் நுண்ணியல் கலைஞன்
தூரிகையின் தலைமயிரைப்பிய்த்து
இப்படியும் அப்படியுமாய்
அசைத்து
வண்ணங்களை
உடைத்துக்காட்டியிருந்தான்
ஒரு பிரசவத்தின் 
கன்னிக்குடம் உடைந்து
அங்கு ஒரு சமுத்திரம்
சிரித்துக்கொண்டு 
அலைகளை சிலுப்பியது.
அந்தப்பெண்ணைத்
தேடிப்பார்த்தால்
பெண் தெரிவாள்.
தேடல் தான் அங்கே ஓவியம்.
மொண்ணைக்கண்களுக்கு
வெறும் திரை மட்டுமே தெரியும்.
கீற்றுகளே!
உங்களது ஓவியமும் 
நன்றாகத்தெரிகிறது.
இந்த வானத்தை சிறைக்கம்பிகள்
மறைக்க இயலுமா?
மானிட எழுச்சியை
மறைக்கும் ஆதிக்க மேகங்கள்
நிலைக்குமா இங்கு?
இந்தக்கேள்வியைத்தானே
கூர்மையாக‌
தைத்துக்கொண்டிருக்கிறாய்.
வெளிச்சப்பிசிறுகளில்
பிதுங்கி வரும் 
விடியல் சித்திரங்களும்
அதோ
உன் கீற்றுகளிடையே
கண் சிமிட்டுகின்றன.

=============================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக