திங்கள், 8 ஜூன், 2020

கடவுள் என்றொரு நாத்திகன்





கடவுள் என்றொரு நாத்திகன்
===============================================ருத்ரா

கடவுள் எங்கே காட்டு
என்று
கடவுள் பக்தனைக்கேட்டார்.
"நீயே அது"(தத்வம் அஸி)என்று
நீயே சொல்லிவிட்டாயே
என்றான் பக்தன்.
ஏன் 
நானே பிரம்மம் (அஹம் பிரஹ்மாஸ்மி)
என்றும் 
நான் சொல்லியிருக்கிறேனே.

தன்மை
முன்னிலை
படர்க்கை
என்று இலக்கணம் சொன்னது.

தூணுக்குள் என்றார்கள்
துரும்புக்குள் என்றார்கள்
திரும்பவும் கேட்டால்
கோபம் கொண்டு
குடல் கிழித்தார்கள்.

கடவுள் எங்கே காட்டு
என்று 
கடவுள் கேட்டுக்கொண்டே தான்
இருக்கிறார்.

ஒருவன் அறிவுக்கணை வீசினான்.

எங்களுக்குத் தெரியவில்லை என்று தான்
உன்னிடம் 
தினமும் கேட்டுக்கொண்டிருக்கிறோம்.
இல்லை என்ற‌
பதில்கள் எல்லாதிசையிலிருந்து
எதிரொலிக்கின்றன.
ஆனால்
நான் உன் பக்தன் 
உன்னை இல்லை என்று சொன்னால்
நான் இல்லை 
நீ இல்லை
யாரும் இல்லை.

கடவுள் இடைமறித்தார்.
கடவுள் இல்லை என்று நீ நம்பினால்
எனக்கு ஒரு சேதமும் இல்லை.
கடவுள் இருக்கிறது என்று நீ நம்பினால்
எனக்கு எந்த மகுடமும் இல்லை.

நம்பிக்கை என்பது உள்ளம் சார்ந்தது.
உன் உள்ளம் உன்னைச்சார்ந்தது.
உன் உள்ளம் உன் அறிவை
நங்கூரம் பாய்ச்சியிருக்கிறது.
அதனால் நீ கேள்வி கேட்கிறாய்.
கேள்வியே உன் உயிர்.
என்னைப்பார்த்து 
"நீ யார் அல்லது எது?"என்று
கேள்வி கேட்கவேண்டும்.
அறிவு ஒன்று சொல்லும்.
உணர்ச்சி ஒன்று சொல்லும்.
உனக்குள் அறிந்ததை 
நீ சொல்.

"ஏதோ ஒன்று 
ஏதும் அறியாமல் உன்னை
நம்பச்சொல்கிறது.
நான் நம்புகிறேன்."

அப்படி என்றால்
கடவுள் எங்கே காட்டு
என்ற என் கேள்விக்கு
என்னைக்காட்டுவது தானே...

கடவுள் தொடர்ந்தார்.
பக்தனின் சுட்டுவிரல் இன்னும் 
நீளவில்லை.
அவரைச் சுட்டிக்காட்டும்போது
அங்கே எல்லாம் 
வெறுமை ஆகி விட்டால்...

ஹ்ஹாஹ்ஹா...
கடவுள் தான் சிரித்தார்.
சந்தேகமே வேண்டாம்.
நான் நான் இல்லை.
நானே ஒரு நாத்திகன் தான்.
நான் தினந்தோறும்
என்னை இந்தக்கேள்விகளில் தான்
உன்னிடம் தேடுகிறேன்.
உன் 
"போற்றி போற்றி"களோ
இல்லை
"சுக்லாம்பரதங்களோ"
என் மீது வந்து விழுந்து
குப்பைகள் மலைகள் போல்
குவிகின்றன.
எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டு போ.
அந்தக்கேள்வியை மட்டும்
என்னிடம்
வீசி எறிந்து விட்டு.
....
நீ கடவுள் இல்லை.
கடவுள் நீ இல்லை.
கடவுள் எங்கே காட்டு?
.........
.........
எல்லாவற்றின் நியூகிளியசும்
இதுவே தான்.

==============================================



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக